Wednesday, December 22, 2021

ஐந்தாவது சித்த   மருத்துவ நாள் - தேசிய மாநாடு  - 23 டிசம்பர் 2021





ஆயுஷ் அமைச்சகம், இந்தியா முழுவதும் உள்ள பொது மக்களிடையே பாரம்பரிய இந்திய முறைகளான ஆயுஷ் மருத்துவத்தை (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, சோவா ரிக்பா (ஆம்ச்சி மருத்துவம்) மற்றும் ஹோமியோபதி) ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆயுஷின் ஒவ்வொரு அமைப்பும் ஆண்டுதோறும் அந்தந்த மருத்துவத் துறைகளின் தேசிய தினத்தை கொண்டாடுவது ஆயுஷ் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதன்படி 2017 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும், மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் வரும் சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய மாமுனியின் பிறந்தநாளை சித்தர் தினமாக கொண்டாடி வருகிறது. அதன் பொருட்டு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஐந்தாவது சித்தர் தினம் "தொற்றுநோய்களுக்கான பரிகாரத்தில் சித்த மருத்துவத்தின் வலிமை” எனும் தேசிய மாநாடு டிசம்பர் 23, 2021 அன்று நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது.
இடம்: சென்னை வர்த்தக மையம்- நந்தம்பாக்கம்
   
இந்நிகழ்ச்சியில் 
மாண்புமிகு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை  
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர கலுபாய் ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை  
மாண்புமிகு மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
திரு. பிரமோத் குமார் பதக், சிறப்பு ஆயுஷ் செயலாளர்
திரு.  மனோஜ் நேசரி, ஆலோசகர் (ஆயுர்வேதம்), ஆயுஷ் அமைச்சகம்
மரு. ஜே. இராதாகிருஷ்ணன் செயலாளர், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 
திரு. எஸ் கணேஷ், இயக்குனர் மற்றும் பேராசிரியர் பி பார்த்திபன் இணை இயக்குனர், இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம்
திருமதி. கவிதா கர்க், ஆயுஷ் இணை செயலாளர் மற்றும் திரு. செந்தில் பாண்டியன், ஆயுஷ் இணை செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய மாண்புமிகு  மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை    அவர்கள் 
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் பழமையான பாரம்பரிய சித்த மருத்துவம் மீண்டும் எழுச்சி பெற இந்த சித்தர் தின நாள் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது ஆயுஷ் அமைச்சகம் ​​தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த 6 மார்ச் 2020 அன்று முதல் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டது மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், நாடு முழுவதும், இலவசமாக ஆசாதி-கா-அமிர்த மஹோத்சவ் திட்டத்தின் கீழ் சித்த மருந்துகள் கபசுர குடிநீர், அமுக்குரா சூரணம் மற்றும் ஆயுஷ் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இரண்டு காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் தலைமையகம் ரூ.12,09,77,814/- மதிப்பீட்டில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டு  கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது மேலும் தேசிய சித்தா மருத்துவ நிறுவனத்தின் புதிய புறநோயாளிகள் கட்டிடமும் விரைவில் திறந்து வைக்கப்படும் - எனக் கூறினார்
கௌரவ உரையாற்றிய மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முஞ்சாபரா மகேந்திர கலுபாய்,  ஆயுஷ் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அவர்கள் 
இந்திய அரசு, மாண்புமிகு பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பொது மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது. அதன்படி பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு புத்துயிர் அளித்து பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை ஆயுஷ் அமைச்சகம் வழங்குவதில் இன்றியமையாத அங்மாக விளங்கி வருகிறது. சித்த மருத்துவ முறை கலாச்சார நடைமுறைகள் மற்றும் பண்டைய மருத்துவ ஞானத்தை பிரதிபலிக்கிறது மேலும் அதன் வேர்கள் பண்டைய தமிழ் நாகரிகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் பத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது, புற நோயாளிகளுக்கான மின்னணு தரவுப் படிவுகள் அளவிடப்பட்ட தேரன் மென்பொருளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சித்த மருத்துவர்கள் உருவாக்கிய இந்த மென்பொருள் தற்பொழுது இந்தியாவெங்கும் ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ நிலையங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சித்தர் தினத்தை கொண்டாடுவது, பழங்கால பாரம்பரிய மருத்துவ முறை மக்களிடையே பரந்த அளவில் சென்றடைவதற்கு வழிவகுக்கும் மேலும் ஆயுஷ் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் எப்போதும் முழு மனதுடன் ஆதரவை வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்- எனக் கூறினார்
பேருரையாற்றிய திரு. பிரமோத் குமார் பதக், சிறப்பு ஆயுஷ் செயலாளர் - அவர்கள்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியபோது, ​​பாதிக்கப்பட்ட மக்களிடையே காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதிலும், வைரஸ் தொற்றின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சித்த மருத்துவம் முக்கியப் பங்காற்றியதன் மூலம் சித்த மருத்துவ முறை நன்கு அறியப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம், கோவிட்-19 நோயைத் தணிக்க, குழந்தைகளுக்கான வீட்டுப் பராமரிப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மத்திய அரசு ஆயுஷ் கல்வி முறையை சீரமைப்பதற்காக, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய 2015-20 ஆம் ஆண்டில் மொத்தம் 184 புதிய ஆயுஷ் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் விளைவாக கூடுதலாக 16824 இளங்கலை இடங்களும் 2258 முதுகலை இடங்களும் கிடைத்துள்ளன. சித்த மருத்துவ பணியாளர்கள் கோவிட் பராமரிப்பு மையங்களில் தங்களது தன்னலமற்ற சேவைகளை வழங்கியமைக்கு பாராட்டுகிறேன் - எனக் கூறினார்.
மரு. ஜே. இராதாகிருஷ்ணன் செயலாளர், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை; திரு. எஸ் கணேஷ், இயக்குனர், மற்றும் பேராசிரியர் பி பார்த்திபன் இணை இயக்குனர், இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னதாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர், பேராசிரியர் மரு. கே.கனகவல்லி அவர்கள் வரவேற்புரையை வழங்கி, முந்தைய காலங்களில் எச்.ஐ.வி, டெங்கு, சிக்குன்குனியா, பறவைக் காய்ச்சல்  போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கை நினைவு கூர்ந்தார். மேலும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தினால் கொரோனா நோய் நிலையில் சித்த மருத்துவத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறினார்.
நிறைவாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மரு. பி-மீனாகுமாரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 500 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு வாய்மொழி வாயிலாகவும், சுவரொட்டி விளக்கக்காட்சிகள் மூலமாகவும் - சித்தாவில் கோவிட் மேலாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சித்த மருந்துகளின் நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற துணை கருப்பொருள்களின் கீழ், தொற்று நோய்களுக்கான சித்த அமைப்பின் வலிமை என்ற கருப்பொருளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சித்த மருத்துவம் மற்றும் அமைப்பு
ஆயுஷ் அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக சித்த மருத்துவம் விளங்குகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படை உணவு மற்றும் வாழ்க்கை முறை. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். மேலும் எளிய வாழ்க்கை முறைகள் மூலம் உடல், மன, சமூக மற்றும் ஆன்மீக நல்வாழ்வு. வர்மம், தொக்கணம் போன்ற வெளிப்புற சிகிச்சைகளும் அமைப்புக்கு வலு சேர்க்கின்றன. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆகியவை ஆராய்ச்சிக் குழுவை உருவாக்குதல், முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தரமான அளவுகோல்களை உருவாக்குதல், மருந்துகள் தரப்படுத்துதல் மற்றும் சரிபார்த்தல், பொது சுகாதார அமைப்பில் மேம்பட்ட செயல்பாடு மற்றும் சித்த பயிற்சியாளர்களின் பலதரப்பட்ட தொழில் திறன் மற்றும் வளர்ச்சி செயல்முறைகளை மேம்படுத்திவருகிறது.

      பேராசிரியர் மரு. கே.கனகவல்லி,
       தலைமை இயக்குநர்,
       மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் 
       ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு









No comments:

Post a Comment

பாரதிராஜா - நட்டி- ரியோ ராஜ் - சாண்டி- கூட்டணியில் உருவாகும் 'நிறம் மாறும் உலகில் ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்க...