Monday, March 28, 2022

*‘கேஜிஎப் சாப்டர் 2’ ட்ரெய்லர் வெளியீடு*

*‘கேஜிஎப் சாப்டர் 2’ ட்ரெய்லர் வெளியீடு*







*தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம்*


*ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. ‘கேஜிஎப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.


இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.


‘கே ஜி எஃப் 2’ படத்தின் முன்னோட்ட வெளியீடு தொடர்பாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கூறுகையில், '' கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட் படத்தை வெளியிடுவது எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கௌரவம். இந்தப்படம் நாடுமுழுவதும் பெரியதொரு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. யஷ் கடினமாக உழைத்து, அருமையான படைப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கான வெற்றியாக இந்த படம் அமையும்.” என்றார்.


இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியிடும் நடிகர் பிரிதிவிராஜ் பேசுகையில், '' கேஜிஎப் 2 ஏப்ரல் 14ஆம் தேதி முதல் திரை அரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகர் யஷ்ஷை சந்திக்க நேர்ந்தது. கேஜிஎப் 2 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும் என அவரை வற்புறுத்தினேன். ஏனெனில் எனக்கு அதில் நம்பிக்கை இருந்தது. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் புதிய டிரெண்டை உருவாக்கி, இந்தியா முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென்னிந்திய சினிமாவுக்கு இது பெருமையான தருணம். இந்திய திரை உலகினர் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. பாலிவுட், மோலிவுட், கோலிவுட் டோலிவுட் என எல்லா வுட்களும் இருக்கட்டும். இருப்பினும் எல்லா தடைகளையும் உடைத்து, கைக்கோர்த்து, இந்தியாவிற்கான திரைப்படத்தை படைப்போம். '' என்றார்.


கே ஜி எஃப் 2 படத்தில் நடித்திருக்கும் நடிகை ரவீனா டாண்டன் பேசுகையில்,''  இயக்குநர் பிரஷாந்த் நீல் முழுமையான ஜென்டில்மேன். அவருடன் பணியாற்றுவது அற்புதம். முழுமை பெற்ற தொழில் முறையிலான படைப்பாளி. யஷ் ஒரு அற்புதமான மனிதர். படப்பிடிப்புத் தளங்களில் எங்களை சவுகரியமாக பணியாற்றுவதை உணர வைத்தார். இந்தப் படம் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அர்ப்பணிப்பு மற்றும் தொழில் முறையிலான குழுவினருடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்றும்போது அனைவரும் ஒரு குடும்பம் என்பதை  புரியவைத்தது. யஷ் ஒரு அழகான நடிகராகவும், எப்போதும் நகைச்சுவையுடன் பேசும் மனிதராகவும் இருந்து வருகிறார்.'' என்றார்.


படத்தின் நாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' 2016ஆம் ஆண்டில் இப்படத்திற்காக கையெழுத்திட்டேன். அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். படத்தின் மூலம் பயணித்த  பயணம் மறக்க முடியாததாக இருந்தது. எனக்கு சிறந்த சக நடிகராக இருந்த யஷ்சுக்கு நன்றி. ஒட்டு மொத்த படக்குழுவினரும் அயராது உழைத்து நல்ல படைப்பை கொடுத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் படத்தை வியந்து பார்த்து ரசிப்பார்கள்'' என்றார்.


இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், '' நாங்கள் கேஜிஎப் பயணத்தைத் தொடங்கி எட்டு வருடங்கள் நிறைவடைகிறது. சொல்ல முடிந்த அனைத்தையும் கதையாக சொல்லி இருக்கிறேன். அனைவரும் படம் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க இயலாது. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை பெரிய அளவில் வெற்றிபெற செய்து, கன்னட சினிமாவை இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பெற்று தந்ததற்கு அனைவருக்கும் நன்றி. என்னுடன் சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் இருக்கிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் கே ஜி எஃப் படைப்பு உருவாக சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறுவேன். கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிடுபவர்களுக்கும் நன்றி.


கே ஜி எஃப் 2 படத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பெரிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது. நாங்கள் தேர்ந்தெடுத்த நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்கள். அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டனர். கேஜிஎப் 2 ஏப்ரல் 14 அன்று தேதியன்று வெளியாகும்போது, படத்தின் நாயகனான யஷ் ஏன் ராக் ஸ்டார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியவரும். யஷ் அனைத்து அம்சங்களும் அடங்கிய நவீன செல்போன் போன்றவர். அவர் என்னை நன்றாக வளர்த்தார். எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பல இடங்களில் வசனம் கூட எழுதினார். அவரும் நன்றாக நடித்து, தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்தார்.  கடந்த எட்டு ஆண்டுகளில் கே ஜி எஃப் 2 படத்தின் அனைத்து நல்ல விஷயங்களையும் மறைந்த டாக்டர் புனித் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் எங்களின் பெருமை '' என்றார்.


படத்தின் நாயகன் யஷ் பேசுகையில், '' புனித் ராஜ்குமாரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். ஹோம்பாலேயின் பயணம் புனித் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் நானும் சிறிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறேன். இப்படத்தின் மூலம் கிடைக்கும் எல்லா புகழும் என்னுடைய கன்னட சினிமாவுக்கும், அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சேர வேண்டும். அத்துடன் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் எங்களது கனவுகளை நனவாக்க நல்லதொரு வாய்ப்பை வழங்கினார்கள்.


இது பிரசாந்த் நீலின் படம். அதில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். அவர் கதாநாயகர்களை நேசிக்கிறார். ஒவ்வொரு படைப்பாளிகளும் முன்னணி நடிகர்களை நேசிக்கும் போது அவர்களிடமிருந்து சிறந்தவற்றை பெறுகிறார்கள்.


ரவீனா தாண்டன் ஒரு அற்புதமான நடிகை. சஞ்சய்தத் ஒரு சிறந்த போராளி. தன்னுடைய உடல்நல சிக்கல்களுக்கு இடையில் சண்டைக்காட்சிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, படத்தை ஒப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றார். நான் அவரின் மிகப்பெரிய ரசிகன்.


எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஐந்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்த என் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நன்றி. அவரின் முதல் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது அதிர்ஷ்டம் தான். படத்தில் பணியாற்றிய நடிகை மாளவிகாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி'' என்றார்.


கேஜிஎப் சாப்டர் 2 முன்னோட்டம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் ஹோம்பாலே பிலிம் சார்பில் திரு விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.


https://youtu.be/tLeTx5OdjZs

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...