நடிகர் ஸ்ரீராம் கலந்துகொண்ட ஸ்ரீராமநவமி விழா.
சாய்பாபா சன்னதியில் சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரம் வழங்கிய ஸ்ரீராம்
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருக்கும் அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில், பாபாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 1008 சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இந்த சுப விழாவில் 'பசங்க', 'கோலிசோடா' படப் புகழ் நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடிகர் பாண்டி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் நடிகர் ஸ்ரீராம் பேசுகையில், '' எங்களுடைய வீட்டில் ஒன்றரை அடி உயர சாய்பாபா சிலை ஒன்று உள்ளது. என்னுடைய பெற்றோர்கள் அதற்கு ஆரத்தி காட்டும் பொழுது, காண்பதற்கு வித்தியாசமாக இருக்கும். நான் அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இருப்பேன். தற்போது வளர்ந்து நடிகனான பிறகும் இன்றும் எங்களுடைய வீட்டில் சாய்பாபா சிலைக்கு பூஜையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது. வாழ்க்கையில் பல அற்புத தருணங்களை சாய் பாபாவின் அருளால் சந்தித்திருக்கிறேன். சாய்பாபா ஆலயத்தில் அவருடைய பிறந்த நாளையும் ஸ்ரீராம நவமி விழாவையும் கொண்டாடுகிறோம். நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டவுடன், மறுப்பு எதுவும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இதுவும் அவரது ஆசி தான். சாய்பாபாவை வணங்குவதால் நம்முள் இறை நம்பிக்கை அதிகரித்து மன அமைதியும், வெற்றி பெறுவதற்கான சூழலும் உருவாகிறது. '' என்றார்.
துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தை ஏற்படுத்தி, நடத்திவரும் சாய்பாபா பக்தையும், ஆலயத்தின் தலைவருமான திருமதி புஷ்பலதா ராஜா பேசுகையில்,'' இந்த இடத்தில் ஆலயத்தை எழுப்ப வேண்டும் என்பது எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் லட்சியம். இதற்காக நானும் என்னுடைய கணவரும் இணைந்து பாடுபட்ட போது, சாய்பாபா பக்தர்களின் ஆதரவினால் இதனை முழுமையாக நிறைவு செய்தோம். நான்காம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். 1008 சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரதானம், அன்ன தானத்தையும் வழங்கியிருக்கிறோம். சாய்பாபாவின் அருளால்தான் இது சாத்தியமானது என்பதில் எங்களுக்கு மனப்பூர்வமான நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து ஆண்டுதோறும் பாபாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது.'' என்றார்.
ஆலயத்தின் சாய்பாபாவிற்கு தினசரி சேவை செய்துவரும் பக்தர் தினேஷ் சாய்ராம் பேசுகையில், '' நான்காண்டுகளாக இங்கு நான் சாய்பாபா சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறேன். துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்களின் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறி வருவதால் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைக்காக ஆலயத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான சேவையை ஆலய நிர்வாகம் முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. உங்களது பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்ளுங்கள். அது விரைவாகவும், நிறைவாகவும் நடைபெறும். இந்த அற்புதத்தைக் காண ஒருமுறை ஆலயத்திற்கு வருகை தாருங்கள்'' என்றார்.
No comments:
Post a Comment