இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி:
தமிழர்களை பெருமைப்படுத்திய பாரதப் பிரதமருக்கு நன்றி!!
இளையராஜா பெயரில் இசைப் பல்கலைக்கழகம் வேண்டும்!!
திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் அறிக்கை!!!
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான "நினைவெல்லாம் நீயடா " படத்தை இயக்கி வரும் ஆதிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இசைஞானி இளையராஜா இந்திய திரையுலகின் பெருமைமிகு அடையாளம். இதுவரை பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சுமார் 1400 திரைப்படங்களுக்கு மேலாக இசை அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். சுமார் 8000 பாடல்களை உருவாக்கி இருக்கிறார். உலகம் முழுவதும் சுமார் 20000 இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். தற்போது 80 வயதிலும் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை யமைத்து வருகிறார். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களாக பட்டியலிடப்பட்ட 25 பேரில் ஒன்பதாவது இடத்தில் இளையராஜா உள்ளார் என்பதும் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் அவர் மட்டுமே என்பதும் தமிழர்கள் கர்வம் கொள்ள வேண்டிய விஷயம். பத்மபூஷன் பத்மவிபூஷன் பல தேசிய விருதுகள் பெற்ற இசைஞானிக்கு அவருடைய மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்கமாக, ராஜ்யசபை எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம். இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற இடமெல்லாம் திருவள்ளுவரையும் பாரதியையும் தூக்கி பிடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர்களின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே இந்த நியமனம் அமைந்திருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழும் சகாப்தமான இளையராஜாவை மென்மேலும் கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் தேசிய திரைப்பட விருதுகளுடன் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது போல மத்திய அரசு இசைஞானி இளையராஜா பெயரில் ஒரு விருதை உருவாக்கி வருடம் தோறும் இசைத்துறை சாதனையாளர் ஒருவருக்கு அந்த விருதை வழங்க வேண்டும். அத்துடன் சென்னையில் உள்ள மிக முக்கியமான சாலைக்கு இளையராஜாவின் பெயரை சூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இசைஞானியின் பெயரால் ஓர் இசைப் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும். இவையெல்லாம் இளையராஜாவை பெருமை படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களை பெருமைப்படுத்தும் செயலாகவும் அமையும். எனவே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் ஆதிராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment