வாட்ச் திரைப்பட விமர்சனம்
மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் அவ்வப்போது வரும்.
அந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் வாட்ச்.
கேலிச்சித்திரக் கலைஞராக இருக்கும் நாயகன் கிரிஷின் மகிழுந்தில் ஏறி இறங்கும் ஒரு பத்திரிகையாளர் மூலம் மிகப்பெரிய மருந்து ஊழல் பற்றிய தகவல் தெரிகிறது.
நாயகன் ஒரு இராணுவ வீரரின் மகன் என்பதால் நாட்டைக் காக்கும் எண்ணத்துடன் போலிமருந்து வியாபாரிகளை நெருங்கி பல ஆதாரங்களைச் சேகரிக்கிறார்.
ஆனால் வில்லன்களிடம் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிறார். அதன்விளைவு 3 ஆண்டுகள் சுயநினைவின்றி மருத்துவமனையில் இருக்கிறார்.
அதன்பின் அவருக்கு நினைவு திரும்புகிறது. கூடவே ஒரு விநோத நோயும் வருகிறது. அதனால் மூன்றாண்டுகளுக்கு முன் பார்த்த நண்பர்கள் உறவுகளின் முகங்கள் முற்றிலும் மாறுபட்டுத் தெரிகிறது.
இவ்வளவு சோதனைகளுக்கு நடுவே அவர், மருந்து கொள்ளைக்கார்ர்களைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதைப் பரபரப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் வாட்ச்.
நாயகன் கிரிஷ் தன் வேடத்துக்கேற்ப துடிப்புடன் நடித்திருக்கிறார்.
நாயகிபோல் படத்திலிருக்கும் சப்ரினா ஆலமுக்கு மாறுபட்ட வேடம். நாயகனுக்கு உதவியாக இருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்.
வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தத்தம் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
முகமது அமீன், விக்னேஷ் வாசு,இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நால்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் மும்பை மாநகரை வானிலிருந்து சுற்றிக்காட்டும் ஒளிப்பதிவாளர்கள் அதன்பின் சென்னையை மற்றும் கடற்புறங்களை வானிலிருந்தும் தரையிலிருந்தும் சுற்றிக் காட்டுகிறார்கள்.
சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்கள் கதையை விளக்கிச் செல்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் அசோகன்.
மிகப்பெரிய சமுதாயச்சிக்கலை மையமாகக் கொண்ட கதையில் நாயகனுக்கு ஒரு புதுவகை நோயைக் கொடுத்து வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.
No comments:
Post a Comment