Tuesday, September 20, 2022

ரஜினி கமலுக்கு போட்டியாக ராமராஜன் என்றுமே இருந்ததில்லை ; ராதாரவி வெளிப்படை பேச்சு

 ரஜினி கமலுக்கு போட்டியாக ராமராஜன் என்றுமே இருந்ததில்லை ; ராதாரவி வெளிப்படை பேச்சு






















பத்து வருடங்களுக்கு பிறகு சாமான்யனாக திரும்பி வரும் ராமராஜன்


ராமராஜன் ரசிகராக மாறி சாமான்யன் படத்திற்கு பாட்டெழுதிய பொன்னியின் செல்வன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்


சாமன்யன் ராமராஜன் நெருஞ்சி அல்ல.. குறிஞ்சி ; இயக்குனர் நந்தா பெரியசாமி புகழாரம்


ராமராஜனுக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது.; சிலிர்க்கும் சினேகன்  


ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததால் கிடைத்த கிடைத்த பரிசு ; சந்தானபாரதி நெகிழ்ச்சி


வனவாசம் சென்று வந்தவர்கள் எல்லாம் அரசாண்டுள்ளனர்.. ராமராஜனும் அரசாள போகிறார் ; எம்.எஸ்.பாஸ்கர் ஆருடம்


கதாசிரியர் தனி.. இயக்குனர் தனி ; தயாரிப்பாளர் மதியழகனின் துணிச்சலான முடிவு 


இரண்டாவது குழந்தைக்கு பார்ட்-2 என பெயர் வைப்பீர்களா..? சாமான்யன் ராமராஜன்  பளீர் கேள்வி


ராமராஜன் துப்பாக்கி பிடிச்சு என்ன பண்ண போகிறார் ? ; சாமான்யன் விழாவில் சஸ்பென்ஸ் வைத்த ராமராஜன்


சாமான்யன் படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன் ; ராமராஜன்


கோடிகளை கொட்டி கொடுத்தாலும் தரங்கெட்ட படத்தில் நடிக்க மாட்டேன் ; ராமராஜன்


இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத இன்டர்வெல் காட்சி ; சிலாகிக்கும் சாம்யன்யன் ராமராஜன்


வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கியவர்.


இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத. இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு  பாடலை எழுதியுள்ளார்.


இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி  திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன், இயக்குனர் சந்தானபாரதி, கவிஞர் சினேகன், கும்கி-2 பட கதாநாயகி ஷ்ரத்தா ராவ், பாக்ஸர் பட கதாநாயகி  ஆர்யா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நடிகர் ராதாரவி பேசும்போது, “இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன்.. அதுதான் நடந்தது. அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின. அவ்வளவுதான்.. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.


ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம்.. ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார். அவருக்கு மனசு சுத்தம்.. அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன்.. வெளியூர் செல்லும்போது மதுரைப்பக்கம் எங்கோ ஒரு கிராமத்தில் ராமராஜன் ரசிகர் மன்றம் என்கிற போர்டை பார்த்தபோது, இவர் அழியமாட்டார்.. இவரை அழிக்க முடியாது என்று அருகில் இருந்தவரிடம் கூறினேன்... நான் இப்படி சொல்வது ஏனென்று சாமான்யனுக்கு புரியும். 

 

இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை இருப்பதாக கூறியுள்ளார். 


எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று பேசினார்


மலேசிய முன்னாள் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் குலசேகரன் பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் தயாரிக்கும் படங்கள்  மலேசியாவிலும் வெளியாகி வருகின்றன. அரசியல், தேர்தல் காரணமாக பிஸியாக இருப்பதால் திரைப்படங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் என் மனைவி இவர்கள் தயாரிப்பில் வெளியான மஹா என்கிற படத்தை பார்த்துவிட்டு வந்து, கட்டாயம் நீங்களும் பாருங்கள் என்று என்னை வலியுறுத்தினார். அந்த அளவுக்கு நல்ல படங்களாக தொடர்ந்து தயாரிக்க வாழ்த்துகிறேன்” என்று கூறினார் 


இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “ராமராஜன் 12 வருடம் கழித்து வருகிறாரே என்று கவலைப்பட தேவையில்லை.. காரணம் நெருஞ்சி அடிக்கடி பூக்கும்.. ஆனால் குறிஞ்சி 12 வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும். அவரும் குறிஞ்சி போல தான். இந்த வயதில் ஏன் நடிக்க வருகிறார் என கேள்வி எழுப்பும் சிலருக்கு நான் சொல்வது, நடிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல.. இவர் இனி தொடர்ந்து நடிப்பார்.. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற தன்னம்பிக்கையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருகிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தான் பிஸியாக இருக்கும் சூழ்நிலையிலும் கூட, இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றால், அவர் தீவிரமான ராமராஜன் ரசிகர் என்பதால் தான்” என பாராட்டி பேசினார். 


பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டு இருந்த சமயத்தில் நான் சினிமாவில் நுழையாமல் போய்விட்டேனே என்றும் அவர்களுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்றும் வருத்தப்பட்டது உண்டு. அப்படிப்பட்டவர்களில் ராமராஜனும் ஒருவர் காரணம் அது ஒரு பொற்காலம். கிட்டத்தட்ட 3000 பாடல்களை  எழுதி  இருந்தாலும் ராமராஜனுக்கு எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. சோளக்காட்டில், வயல்வெளியில், பயணங்களில் என அவரது படத்தின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எனக்கு என்னுடைய ஆசை  நிராசை  ஆகிவிடாமல் இன்று அவர் நடிக்கும் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆசிர்வாதம் தான். தமிழ் சினிமாவில் ராமராஜன்      என்பவருக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது. இதோ அவரே மீண்டும் அதில் வந்து அமர்ந்துகொண்டார்” என்று சிலாகித்து பேசினார்.  


இந்த படத்தின் கதாசிரியர் கார்த்திக் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு பல இன்ப அதிர்ச்சிகள் கிடைத்துள்ளன. என்னுடைய கதையில் ராமராஜன் சார் ஹீரோவாக நடிக்கிறார் என்பதை என்னால் இப்போதுவரை நம்ப முடியவில்லை” என்று தனது பிரமிப்பை வெளியிட்டார். 


இந்த  இசை வெளியீட்டு விழாவிற்கு திடீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி பேசும்போது, ‘முப்பது வருடங்களுக்கு முன்பு கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் இணைந்து நடித்தோம். தமிழ்நாட்டில் இப்போது என்னை மூலைமுடுக்கெல்லாம் பலருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் கரகாட்டக்காரன் படமும் அதில் ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததும் தான். இத்தனை வருடம் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார். 


நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, ‘பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே  அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார். இவர் நடித்த சோலை புஷ்பங்கள் படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று  ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள்.. நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு  அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை  கேட்பதும் அதுபோலத்தான்” என்று சரியான பதிலடி ஒன்றையும் கொடுத்தார். 


தயாரிப்பாளர் மதியழகன் இந்தப்படம் குறித்தும் தனது நிறுவனத்தில் உருவாகும் தயாரிப்புகள் குறித்தும் பேசும்போது, “கதை தான் முக்கியம் என்பதை மனதில் கொண்டு படங்களை தயாரித்து வருகிறோம்.. எங்களது நிறுவன தயாரிப்புகளில் கதாசிரியர் என்பவர் தனியாகவும் படத்தை இயக்குபவர் இன்னொருவராகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அபோதுதான் நல்ல தரமான படங்களை தர முடியும். ராகேஷ் இந்தபடத்தின் கதையை சொன்னதும் ராமராஜன் சார் தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதேபோல அவரிடம் கதை சொன்னதும் சாமான்யன் என்கிற டைட்டிலும் என் மனதில் உடனடியாக தோன்றியது. இத்தனை வருடங்கள் கழித்து நடிக்க வரும் அவருக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறினார்.  


இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “இந்த நிறுவனத்தில் மீண்டும் இரண்டாவது படம் இயக்கும் அளவுக்கு நம்பிக்கையை பெற்றுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.. நானும் உங்களைப்போல அங்கே அமர்ந்து ராமராஜனை ரசித்தவன் தான். எனக்கு விஜயகாந்த், ராமராஜன் ஆகியோர் மீண்டும் நடிக்கவேண்டும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், என்கிற விருப்பம் இருந்தது. கடவுள் அருளால் ராமராஜன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. இத்தனை வருடங்களாக அவரது ரசிகர் மன்றங்கள் உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. 


சாமான்யன் என்றாலே காமன்மேன் தான்.. ஆனால் இந்த சாமான்யன் காமன்மேன் அல்ல.. அசாதாரணமானவன். கிராமத்தில் இருக்கும் ஒரு நல்ல மனிதர் சூழ்நிலை காரணமாக ஒரு நேரத்தில் திடீரென மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த கதை. .ஹிட்ச்காக் பட பாணியில் இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் சொன்னது தயாரிப்பாளர் மதியழகன் தான். அந்தவிதமாக பத்து வருடங்களாக நல்ல கதைக்காக காத்திருந்த ராமராஜனிடம் கதை சொல்லி வெறும் 24 மணி நேரத்தில் இந்தப்படத்தை உறுதி செய்தோம்” என்று கூறினார்.

.     

நடிகர் ராமராஜன் பேசும்போது, “என்னுடைய கரகாட்டக்காரன் படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதுமட்டுமா என்னுடைய பட விழா ஒன்றில் இத்தனை மைக், இத்தனை  கேமராக்களை நான் பார்ப்பது இதுதான் முதல்முறை. 


நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில்  நான்  ஹீரோ என்பதைவிட  கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப்போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.  


இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது.  


இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள் நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு இரண்டாவது குழந்தை பிறக்கும்போது கண்ணன்-2 என யாராவது பெயர் வைக்கிறார்களா..? என்னிடம் கூட ஒரு சிலர் கரகாட்டக்காரன் 2 எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குனர் விஜய் மில்டன் கோடீஸ்வரன்-2வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன் 


50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்சன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. இது போதும் எனக்கு.. முதல்முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்று தான் நினைக்க தோன்றுகிறது. இந்தப்படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் விஅழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்..

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...