*சீமான் வெளியிட்ட 'ஆதார்' படத்தின் திரைக்கதை நூல்*
*வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ‘ஆதார்’ திரைக்கதைப் புத்தகம்*
வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. 'பாரதி', 'பெரியார்', 'களவாணி', 'அழகர்சாமியின் குதிரை', 'அந்த நாள்', 'சத்தம் போடாதே' பாலு மகேந்திராவின் 'சந்தியா ராகம்', வசந்த்தின் 'ரிதம்', கமல்ஹாசனின் 'ஹே ராம்', வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', மிஷ்கினின் 'அஞ்சாதே', சமுத்திரக்கனியின் 'அப்பா' என ஏராளமான வெற்றி பெற்ற படைப்புகளின் திரைக்கதை, நூலாக வெளியாகி, வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. திரைப்படம் என்பது காட்சி வழியாக கற்பனையை நம்பகத்தன்மையுடன் பார்வையாளர்களுக்கு சென்று சேர்ப்பிக்கும் ஊடகம் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. அதனைப் புத்தக வடிவில் வெளியிட்டாலும் அதன் சுவை குன்றாமல் வாசகர்களால் நுகரப்படும் .
அந்த வகையில் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதார்'. சர்வதேச அளவிலான வணிக அரசியலை மையப்படுத்தி இதன் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகும் முன்னரே நேர்மறையான விமர்சனங்களால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஆதார்' திரைப்படத்தின் திரைக்கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தால் நூலாக உருவாக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் வெளியிட்டார். அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
'ஆதார்' திரைக்கதை புத்தகம் உருவானது குறித்து இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், '' என்னுடைய 22 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில் மூன்று படைப்புகளை மட்டுமே முத்தாக படைத்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலமாக ஆய்வு செய்து உருவாக்கிய திரைக்கதை தான் 'ஆதார்'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும். இதன் திரைக்கதையை நூலாக எழுதி வெளியிட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதனை தயாரிப்பாளரிடத்தில் தெரிவித்தவுடன் அவரும் முழு சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த நூல் தரமான வடிவில் தயாராகி இருக்கிறது. நூலை வாசித்த பிறகும், திரைப்படத்தை பார்க்கும் போதும், இரண்டும் வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே விதமான உணர்வை அளிக்கும் என நம்புகிறேன்.'' என்றார்.
'ஆதார்' திரைப்படத்தில் அருண்பாண்டியன், கருணாஸ், ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான், 'பாகுபலி' பிரபாகர் ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ற வகையில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணியிசை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment