Wednesday, November 16, 2022

செஞ்சி 'விமர்சனம்


'செஞ்சி 'விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது . ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி.

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.

ஒரு புதையல் வேட்டை போல் இந்தக் கதை தொடங்குகிறது.படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது .ஏதோ ஒரு ரகசியம், மனித அறிவுக்குக் கட்டுப்படாத ஒன்று இருப்பதாக நம்மை அழைத்துச் செல்கிறது.

 புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது,இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டிச்  சற்று நேரம் கதை நகர்கிறது. அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால், இரண்டாவது பாதியில் தொடர்பு படுத்துகிறார் இயக்குநர். புதையல் தேடுவதற்கான படிநிலைகளில் ஒரே நட்சத்திரத்தில் அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐந்துபேர்தான் அந்தப் புதையலை எடுப்பதற்குத்தகுதியானவர்கள் என்று ஒரு நிபந்தனை வருகிறது.
அளவில்லாமல் சுட்டித்தனம் செய்யும் அந்தச் சிறுவர்கள் பெற்றோர்களால் தண்டிக்கப்படவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் காடு மேடு எனச் செல்லும் பாதையில் புதையல் இருக்கும் இடத்தை அடைகிறார்கள்.
அவர்களுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டாவது பாதியில் புதிரை அவிழ்க்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார்.வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

 வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக 
 ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை  மிகச்சிறப்பாக நடித்து உள்ளார்.தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது.

படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் தர்சன் குமார்மாஸ்டர் விதேஷ் ஆனந்த்மாஸ்டர் சஞ்சய்
பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.படத்தில் மூன்று பாடல்கள் தேடல் தேடு என்ற பாடல் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரும் போது ஒலிக்கிறது.

வேண்டும் என்ற பாடல் பிறகு வருகிறது.தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் இது தங்கம் என்கிற பாடல் சிறுவர்களைக் கவரும்.பாடல் காட்சிகளின் இசையைவிட பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் பளிச்சிடுகிறார்.

படத்தில் நடித்துள்ள நடிகர்களை விடவும் படத்துக்குப் பெரிதாகப் பலமாக அமைந்துள்ளது படத்தில் வரும் லோகேஷன்கள் தான். பெரும்பாலும் கல்லார் காட்டுப்பகுதியில் படமாகி உள்ளது .கதைப்படி செஞ்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என்று நிகழ்விடங்கள் வருகின்றன. 

காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாகி உள்ளது .அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவுக்குப் பாராட்டு கூறலாம். நம் தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
அதனால்தான் படத்தில் அந்த லொகேஷன் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்து  பார்ப்பவர்கள் மனதில் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறது. அப்படிப்பட்ட லொகேஷன்களைச் தேர்வு செய்து சரியாகப் பயன்படுத்திய இயக்குநரையும் பாராட்டலாம். 

தமிழ் சினிமாவின் வழக்கம்போல காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்ற எந்த மசாலா அம்சமும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது பெரிய ஆறுதல்.

நமது வரலாறு புதைந்து கிடக்கும் இடங்களைத் தேடித்தேடி படமாக்கி இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலக் காட்சிகளைப் பார்க்கும் போது நமது தொன்மங்கள் மீது நமக்கு  ஆர்வம் வந்து விடுகிறது. மீண்டும் வரலாற்றைப் புதுப்பித்துக் கொள்கிற  உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

சிறுவர்கள் அடிக்கும் லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்றுக் கத்திரி போட்டிருக்கலாம்.அதே சமயம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் முதிர்ச்சி தெரியவில்லை.மேலும் சில காட்சிகளை  நேர்த்தியாக்கி இருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.

நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது.குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு   அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை ரசிக்கலாம்.

மொத்தத்தில் 'செஞ்சி' வரலாற்று உணர்வை நினைவூட்டும் ஒரு வணிகப்படம் என்று கூறலாம்.


No comments:

Post a Comment

*“Kudumbasthan has a relatable story for audiences” - Actor Manikandan*

https://youtu.be/uqJspATafVk?si=5mVBojkOVsIZslBW It often becomes a normalised situation, where an actor with a commendable movi...