Sunday, November 20, 2022

அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...!


அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே...!

கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற்கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன்.

எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20. 10. 2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளை பெறுவதற்காக சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன்.

சுபாஷ் சந்திர போசை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில் எங்களுடைய வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளின் பராமரிப்பாளராகவும் இருந்தார். திருட்டு சம்பவத்தில் நான் அவர் மீது சந்தேகம் கொள்வதற்கு சரியான காரணம் இருந்தாலும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கும் முன், என்னுடைய சந்தேகத்தினை அவரிடம் கேட்டேன். அவர் பதிலைக் கூறாமல் தட்டிக் கழித்தார். இதனால் எனது உடைமைகளை மீட்டுத் தருமாறு காவல்துறையின் புகார் அளித்தேன்.

அவர் என் மீது வெறுக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான அவதூறான செய்திகளையும், தவறான தகவல்களையும் வெளியிட்டுள்ளார். அவருடைய நேர்காணல் மற்றும் அவரது அறிக்கை முற்றிலும் தவறானது. அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். அவரது நேர்காணல்களும், ஊடக தந்திரங்களும், மேற்கூறிய நடவடிக்கைகளில் சந்தேக நபராக இருந்து குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, கவனத்தை திசை திருப்பவும், என்னை களங்கப்படுத்தவும் நோக்கமாக கொண்டிருந்தது.

மேலும் ஷெல்டன் ஜார்ஜ் அளித்த நேர்காணல் மற்றும் அறிக்கை குறித்தும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அவர் ஒப்பனை கலைஞராக இருந்தார். மேலும் அவர் எனக்கு எதிரான கூறும் புகார்கள் அனைத்தும் உண்மைக்கு அப்பாற்பட்டது. என்னை மோசமாக சித்தரிக்கும் வகையில் பத்திரிகைகளில் அவர் அளித்த பேட்டி தேவையற்றது. மேலும் என் மீது அவதூறு பரப்பி அதனூடாக புகழ்பெறும் நோக்கம் கொண்டது.

அவர் கூறியது போல் படப்பிடிப்பு 5. 9. 2022 அன்று நடந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது.., சரியான காரணம் இல்லை. மேலும் அவரது நேர்காணலில் அவருடைய கையடக்க மொபைல் சாதனத்தில் அங்கீகரிக்கப்படாத காணொளியை வெளியிட்டார். இது என்னுடைய தனி உரிமைக்கு எதிரானது. வீடியோ எடுக்கவோ அல்லது அத்தகைய வீடியோவை வெளியிடவோ அவருக்கு அதிகாரம் இல்லை.

சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் எனது நலன்களை சட்டபூர்வமாக பாதுகாக்க பின்வரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

1) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஷெல்டன் ஜார்ஜ் ஆகியோர் மீது தனித்தனியாக புகார் அளித்துள்ளேன்.

2) தேசிய மகளிர் ஆணையத்திலும் இவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்.

3) இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுவதை தடுக்க கோரியும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் காணொளிகளையும், பிரசூரிக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளையும் நீக்க கோரியும், இதற்கு தடை கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.

நான் சட்டத்தை முற்றிலுமாக பின்பற்றுகிறேன். அத்துடன் நீதி வழங்குவதற்கான சட்ட அமைப்பின் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். என்னை மோசமாக சித்தரிக்கும் பிரசுரங்களும், செய்திகளும், காணொளிகளும், எனக்கு கடுமையான மன அழுத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளன. எனது நண்பர்கள் மற்றும் நல விரும்பிகள் மற்றும் அனைவரின் ஆதரவுடன் நான் விரும்பி தேர்ந்தெடுத்த துறையில் எனக்கென ஒரு நற்பெயரை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதாலும், என் மீதான குற்றம் சுமத்தி வெளியான பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதாலும், இந்த பிரச்சனையில் எனது நிலைப்பாட்டை வலுவாக வலியுறுத்துகிறேன்.

நான் கடினமாக உழைத்து சம்பாதித்த சொத்து திருடப்பட்டதால், காவல்துறையில் புகார் அளித்தேன். அதேபோல் எனக்கு எதிராக பரப்பப்படும் இது போன்ற தவறான தகவல்களை அகற்றுவதற்காகவும் நான் புகார் அளித்தேன். நான் தொடர்ந்து சரியான போராட்டத்தில் ஈடுபடுவேன். எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சோதனையான காலகட்டத்தில், எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள்.... ஆகியோர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

பார்வதி நாயர்.

No comments:

Post a Comment

Capture Every Live Moment: OPPO Reno13 Series Launched in India with New MediaTek Dimensity 8350 Chipset and AI-Ready Cameras

Capture Every Live Moment: OPPO Reno13 Series  Launched in India with New MediaTek Dimensity  8350 Chipset and AI-Ready Cameras -         ...