- ’டாக்டர்’ பட புகழ் கராத்தே கார்த்தி பேட்டி
’டாக்டர்’ பட நடிகருக்கு மலையாள சினிமா தந்த வரவேற்பு
எங்கோ எப்படியோ இருந்தவர்கள், இருக்க வேண்டியவர்களை தமிழ் சினிமா பல சமயங்களில் இவர் தனக்கானவர் என தேர்வு செய்துகொள்ளும் அப்படி ஒரு அக்மார்க் கலைஞனாக கலைத்தாயாளும், திறன்மிகு படைப்பாளர்களாலும் தேர்வு செய்துகொள்ளப்பட்டவர் கராத்தே கராத்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் வருவாரே அவர்தான் கராத்தே கார்த்தி.
இதற்குமுன் ‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ மலையாள படத்தில் இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது. இவரது நடிப்பு மலையாளம் மற்றும் தமிழ்த் திரைக்கலைஞர்கள் பாராட்டை பெற்று வருகிறது.
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் மிரட்டும் கராத்தே கார்த்தி, கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங்களை வென்றவர். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவரும் கராத்தே கார்த்தியை சந்தித்துப் பேசினோம்.
கராத்தே மாஸ்டரான நீங்க கலை துறைக்கு எப்படி வந்தீங்க?
‘டாக்டர்’ படத்தில் என்னை பார்த்தவர்கள், நான் வடநாட்டுக்காரன் என்று நினைத்திருக்கலாம். ஆனால் நான் மதுரைக்காரன். சின்ன வயசிலிருந்தே சினிமான்னா எனக்கு உயிர். ஆனால் மத்திய ரிசர்வ் போலீஸில் நான் வேலை பார்த்து வந்தேன். என் துறை அணிக்காக கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளேன். எனது பணியை திறம்பட செய்துகொண்டிருந்தபோதே மீண்டும் மீண்டும் சினிமா ஆசை மனசை வருடிக்கொண்டே இருந்தது. எஸ்.ஐ ஆக புரமோஷன் கிடைக்க வேண்டிய நேரத்தில் 2006இல் வேலையை விட்டுவிட்டு இனி சினிமாதான்னு முடிவெடுத்து இறங்கிட்டேன்.
ஃபீல்டுல இறங்கினப் பிறகு நிறைய சிரமங்களை அனுபவித்தேன். ‘தசாவதாரம்’ படத்தில் 150 ரூபாய் சம்பளத்தில் கூட்டத்தில் ஒருவனாய் நடித்தேன். ஆரம்பத்தில் இப்படியான வாய்ப்புகள்தான் வந்தது. பிறகு 350 ரூபாய் சம்பளத்தில் ஜிம்பாய் வேலை செய்தேன். அந்த காலக்கட்டம் என்னைச் சுற்றி இருந்தது சோதனை சூறாவளி. அப்போதெல்லாம் என் மனைவிதான் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். 2012 வரை சீரியல்களில் நடித்தேன். ‘ஆனந்தம்’, ‘கோலங்கள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தேன். 2014லில் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் டயலாக் பேசுவது போன்ற வாய்ப்பு வந்தது. சில்வா மாஸ்டர்தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். இதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதிலிருந்து சினிமாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.
அதன் பிறகு பெரிய கேரக்டர்கள் கிடைத்ததா?
“கடும் உழைப்பு ஒருபோதும் தோல்வியை தராது என்று சொல்வதுபோல் கடுமையாக போராடிக்கொண்டிருந்தேன். தோல்விகளை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த எனக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சண்டை காட்சியில் இரண்டு பஸ்களுக்கு இடையில் தலை கீழாக தொங்கவிடுவது போல் நடித்தேன். அப்போது ஒரு கட்டத்தில் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்புதான் ‘கைதி’. அதை பார்த்துதான் இயக்குனர் நெல்சன் ‘டாக்டர்’ படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார்.
கோமதி அக்கா கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. என் வாழ்க்கையின் முக்கியமான மாற்றம் ’டாக்டர்’ படத்தில் இருந்து தொடங்கியுள்ளது. இதோ ‘ஜெயிலர்’ படத்தில் மறுபடியும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறேன். நான் ரஜினி சாரின் தீவிர பக்தன். இதை பேட்ட ஷூட்டிங்கிலேயே அவரிடம் சொல்லி ஆசி வாங்கியிருக்கேன். இப்போ தலைவருடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.
”எனது திரை வாழ்வில் முக்கியமான கட்டத்தை ஆரம்பித்து வைத்தது ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாதான். அவர் இயக்கிய ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் ‘மெய்’ படத்தை இயக்கிய எஸ்.ஏ. பாஸ்கரன் இணை இயக்குனராக பணியாற்றினார். தற்போது வெளியாகியுள்ள " கூமன் " படத்திலும் அவர்தான் இணை இயக்குனர் அவர் மூலமாகதான் ’கூமன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கூமன் படத்தில் மிக முக்கியமான ரோலில் பிரமாண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்த்த அனைவரும் என்னை வெகுவாக பாராட்டியதை என்னால் மறக்க முடியாது.
எனக்கு மலையாளம் தெரியாது. ஆங்கிலத்தில்தான் மலையாள டயலாக்குகளை எழுதிக்கொடுத்தார்கள். ஆனாலும் எனக்கு மலையாளம் பேசுவதில் தடுமாற்றங்கள் இருந்தது. ஆனாலும் இயக்குனர் ஜீத்து ஜோசப், எழுத்தாளர் கிருஷ்ணகுமார் இவர்கள் எனக்கு அழகாக சொல்லிக்கொடுத்து வேலை வாங்கினார்கள். மலையாளத்தில் எவ்வளவோ திறமையான நடிகர்கள் இருந்தாலும் என் மேல் நம்பிக்கை வைத்து அவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்ததற்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பேன். அதே போல் படத்தின் நாயகன் ஆசிப் அலி, நாயகி ஹன்னா ரெஜி எல்லோருமே என்னிடம் அன்பாக பழகியதை மறக்க முடியாது.”
இனி தொடர்ந்து என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் ?
”எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் வில்லன் வேடம்னா எனக்கு எக்ஸ்ட்ரா போனஸ். வில்லன் நடிகர்களில் அசோகன், நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் ரொம்ப பிடிக்கும். அவர்களை போல தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு இடம் கிடைக்க தொடர்ந்து உழைப்பேன். எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த எனக்கு சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும்னு நம்புறேன்.”
கராத்தே கார்த்தியின் நம்பிக்கை கைகூடட்டும்.
No comments:
Post a Comment