*நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ' தாஸ் கா தம்கி'*
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற 'ஃபலக்னுமா தாஸ்' எனும் படத்தின் மூலம் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார் அன்வர் அலி படத்தொகுப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்திற்கு பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதுகிறார். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தில் மூன்று சண்டை பயிற்சி இயக்குநர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
'ஆர். ஆர். ஆர்' மற்றும் 'ஹரிஹர வீர மல்லு' ஆகிய படங்களின் உச்சகட்ட காட்சிக்கு பிரத்யேகமாக சண்டைக் காட்சிகளை அமைத்த பல்கேரிய நாட்டு சண்டை பயிற்சி இயக்குநர்களான டோடர் லாசரோவ் மற்றும் ஜூஜி ஆகியோர் இந்தப் படத்தின் உச்சகட்ட சண்டை காட்சி காட்சிகளை அமைக்கிறார்கள். மேலும் 'பிம்பிசாரா' படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்த மாஸ்டர் ராமகிருஷ்ணா மற்றும் அந்த படத்தின் சண்டைக் காட்சிகளை மேற்பார்வையிட்ட வெங்கட் மாஸ்டர் ஆகியோர் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை தனித்துவமாக அமைக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ரொமாண்டிக் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை வன்மயே கிரியேசன்ஸ் மற்றும் விஷ்வக் சென் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கராத்தே ராஜு மற்றும் நடிகர் விஷ்வக் சென் ஆகியோர் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.
'தாஸ் கா தம்கி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஷ்வக் சென்னின் அர்த்தமுள்ள தோற்றம்.. ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் அவரது இடக்கையில் கைகடிகாரமும், இடக்காதில் காதணியும் அணிந்து ஆள்காட்டி விரலை அர்த்தமுடன் வலது புருவத்தில் வைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
'தாஸ் கா தம்கி' ரொமான்டிக் வித் ஆக்சன் திரில்லராக தயாராவதால் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களுடன் கூடிய பொழுதுபோக்கை வழங்கும் என்றும், இப்படத்தின் ஆக்சன் கட்சிகள் ரசிகர்களின் கண்களை வியப்பில் ஆழ்த்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'தாஸ் கா தம்கி' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment