Wednesday, December 21, 2022

*தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா*


*தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா*


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

இவ்விழாவினில் 

வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறேன். இன்றைய விழாவில் நம் சங்கத்திற்காக உழைத்த மூத்த உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினராக அங்கீகரித்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு வரச் சம்மதித்து எங்களை வாழ்த்திட்ட செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

தயாரிப்பாளர் ஃபைஸ்டார் கதிரேசன் பேசியதாவது.. 
இந்த விழாவானது நமது குடும்ப விழா போல் நடக்கிறது. நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் கூறும் அறிவுரையுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது.. 
இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நம் சங்கத்தில் மிக குறைந்த தயாரிப்பாளர்களே நிறைய படங்கள் செய்து வருகிறார்கள் மீதமுள்ளவர்கள் கஷ்டப்பட்டுகொண்டிருக்கிறார்கள். இதை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 


நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது… 
என் குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு வந்தது எனக்கு ஆச்சரியமில்லை. இந்த அரசே திரைத்துறைக்குச் சாதகமான அரசு. அவர்கள் சினிமாவுக்கு நல்லது செய்கிறார்கள்.  இந்த இடத்தில் சான்றிதழ் பெறும் அனைவரின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி.  


தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் பேசியதாவது..
 கொரோனா காலத்தை தாண்டி தமிழ் சினிமா எழுச்சி பெற்றதென்றால் அது தேனாண்டாள் முரளி அவர்களால் தான். பல நடவடிக்கைகள் எடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்காலமாக இந்த காலத்தை மாற்றியுள்ளார். அரசும் தயாரிப்பாளர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

தயாரிப்பாளர் காட்ரக்கடா பிரசாத் பேசியதாவது.. 
இந்த கமிட்டி எந்த நிதியும் இல்லாமல் தான் தனது பணியை துவங்கினார்கள். முன்பு இருந்தவர்கள் பேங்க் பேலன்ஸை, கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். இவர்கள் வந்த பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு பொங்கல், தீபாவளி பரிசு தருமளவு மாற்றியிருக்கின்றனர். இவர்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் தேர்தல் நடந்தால் , 10 லட்சம் வரை செலவாகும் அதை தவிர்த்து இவர்களே தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது… 
எங்கள் அழைப்பின் பேரில் வந்திருக்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. 25 ஆண்டுகள் இருக்கும் உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்பது  எங்கள் சங்கத்தில் எடுத்த சிறந்த முடிவு. முன்பு திரைத்துறை முழுமையாக தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. அனைத்து முடிவும் தயாரிப்பாளர்கள் தான் எடுப்பார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அதை மாற்ற வேண்டும். அதற்கு சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அமைச்சர் நம் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார். இந்த விழா மூத்த தயாரிப்பாளர்களை கௌரவிக்கும் விழா. அவர்களை நாம் மதித்து கௌரவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 


மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் பேசியதாவது… 
அனைவருக்கும் வணக்கம். 25 வருடங்களுக்கு மேலாகத் தயாரிப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அங்கீகாரம் தரும் விழா இது. 25 ஆண்டுக்காலம் ஒரு துறையில் நீடித்திருப்பதே மிகப்பெரிய சாதனையில் வரும். நம் முதல்வர் இந்த துறையை அளித்த போது இந்த துறை சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயிக்கு விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்காத நிலை தான் சினிமாவிலும் இருக்கிறது. சங்கம் நிதி சிக்கலிலும் இருப்பதாக சொன்னார்கள். நம் முதல்வர் தலைமையிலான அரசும் இம்மாதிரியான சிக்கலான நிலையில்  தான் அரசை எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் உங்கள் கோரிக்கைகளை சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார். இந்த அரசு சினிமாவுக்கு இணக்கமான அரசாகவே செயல்பட்டு வருகிறது. இந்த அரசு உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றும், ஏற்கனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது.கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழிலில் சினிமா முக்கியமான ஒன்று. இந்த நிலையில்  உதயநிதி போன்றவர்கள் உதவியாக இருப்பது எனக்கு மிகவும் பக்க பலமாக இருக்கிறது.  திரைத்துறையில் இருந்த திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இப்போது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார், அவருக்கு இந்த திரைத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும், அதனால் எனக்கு இப்போது பாரம் குறைந்தது போல் இருக்கிறது. தமிழ் சினிமா மீண்டு வெற்றிப்பாதையில் செயல்பட நீங்கள் குழுவாக இணைந்து என்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனை அரசாங்கம் செய்ய தயாராக இருக்கிறது என கூறிக்கொள்கிறேன்.  மானியம் வழங்குவது தொடர்பான இந்த செய்தியை நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது சீக்கிரம் நடக்க ஆவண செய்கிறேன். அதோடு விருது வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளையும், நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது விரைவில் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன். இந்த சிறப்புக்குரிய சங்கம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


1. தமிழ் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வரும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை எற்று இருக்கிறார். அதற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

2. 20 வருடமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த சங்கத்தை புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

3. பையனூரில் திரைப்பட நகருக்கான இடத்தில், தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டி தருவதற்காக அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and script writer, S...