ஒரு வழக்கை முடிக்க ஒரு வார்த்தை போதும் என்பதைச் சொல்கிற கதை தான் 'டி3'
பல்வேறு விபத்துகள், கண்டங்கள் தாண்டி வரும் படம் 'D3'
நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ' D 3 'என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ் தயாரித்துள்ளார்.
இப்படத்துக்கு மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர்.ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற 'மனம் ஒரு கொதிகலனா?' பாடலுக்கு இசை அமைத்தவர்.கலை இயக்கம் - ஜெயசீலன் , ஸ்டண்ட் -ராம்போ விமல், படத்தொகுப்பு ராஜா ஆறுமுகம் .
இப்படம் இந்த மார்ச் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
படம் பற்றி இயக்குநர் பாலாஜியிடம் கேட்டபோது,
"படத்தின் கதை என்னவென்றால் ,எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வான் என்பது பிரபஞ்ச உண்மை .அப்படி இந்தப் படத்தின் கதையில் குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் குற்றவாளி ஒருவன் ஒரு வார்த்தையை மட்டும் விட்டுச் செல்கிறான். அந்த வார்த்தைக்கான காரணத்தின் நுனி தேடி காவல்துறை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குற்றத்தின் காலடித்தடயம் அறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பது தான் இந்தக் கதை. இப்படம் ஒரு தொடர் படைப்புரீதியில் உருவாக்கி உள்ளது. இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகும்.
D3 படப்பிடிப்பு பல்வேறு கட்ட சோதனைகளையும் தடைகளையும் தாண்டி நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகள் தொடங்கிய அன்று நாயகன் பிரஜின் ஓட்டிய கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த படம் பெரும்பாலும் கோவிட் காலத்தில் படமாக்கப்பட்டது.
அப்போது படக்குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. அதையும் தாண்டித்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
முகக்கவசம் ,கிருமிநாசினி, வெப்ப சோதனை என்று பல முன் எச்சரிக்கைகளைப் பின்பற்றிக் கடந்து இந்தப் படப்பிடிப்பு நடந்து உருவாகி உள்ளது" என்கிறார்.
கண்ணில் கனவைச் சுமந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் கூட்டு உழைப்பினால் இந்தப் படம் உருவாகி உள்ளது. மார்ச் 17-ல் திரைகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment