விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள 'காகிதம்' குறும்படத்தின் டீசர்!
பல்வேறு திரை விழாக்களில் திரையிடப்பட்டு 35 விருதுகளை வென்றுள்ளது காகிதம் என்கிற குறும்படம். இந்த குறும்படத்தை, ஓஷன்ஸ் ட்ராப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி தீபா இஸ்மாயில் என்பவர் தயாரித்துள்ளார்.வினோத் வீரமணி இயக்கியுள்ளார்.
இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சிறுமி மதிஹா நடித்து அசத்தியுள்ளார். வினோத் வீரமணி தற்போது வளர்ந்து வரும் ஒரு திறமையான இளம் இயக்குநர்.
இந்தக் குறும்படம் பற்றித் தயாரிப்பாளர் தீபா கூறும் போது,
" உரிமையும் வெற்றியும் இவ்வுலகில் அனைவருக்கும் சமமே; அவ்வாறு ஆற்றலும் திறமையும் அனைவருக்கும் இறைவன் கொடுத்த வரமே. இந்தக் கண்ணோட்டத்தில் இன்றும் கூட நம் சமுதாயத்தில் மிகச் சிறந்த ஆற்றலும் அறிவும் படைத்த பெரும்பாலான மக்கள் குறைந்த பட்ச சமுதாய மதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள். உரிய அடையாளமும் கிடைக்காமல் உழல்கிறார்கள்.உரிமையும் கிடைக்காமல் இருக்கிறார்கள்.
சமுதாயத்தில் மேல் தட்டுக்கும் கீழ்த்தட்டுக்கும் இடையே இருப்பது ஒரு சிறு கோடு தான்.அதுதான் வறுமைக் கோடு.வர்க்கங்களுக்கிடையே பிரிப்பது ஒரு சிறு மெல்லியகோடு தான் என்பதை உணர்ந்தால் போதும்.
இங்கு அனைவரும் அனைவருக்கும் சமமே. இதன் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கி அதை இயக்குநர் வினோத் எங்களுக்கு விவரித்த விதம் சிறப்பாக இருந்தது.அந்த மையக் கருவில் உருவான குறும்படம் தான் இந்தக் ' காகிதம்'.
காகிதம் குறும் படம் பற்றி இயக்குநர் வினோத் வீரமணி பேசும்போது,
"காகிதம் நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மையிலான கதை என்று கூற முடியாது. இது ஒரு கதை…அல்ல வாழ்க்கையின் எதார்த்தம், நிஜம். வாழ்க்கை ஒரு காகிதம் போன்றது.இந்தக் காகிதத்தில் என்ன செய்ய வேண்டும்? அதில் ஓவியம் தீட்டுவதா இல்லை கிறுக்குவதா? என்பது நம்மைப் பொறுத்தே உள்ளது. அப்படி இந்தக் குறும்படத்தில் வரும் 6 வயது சிறுமி தன்னைச்சுற்றி நிலவும் சூழ்நிலைகளைக் கண்டு கொள்கிறாள்; அதை வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறாள்.
நம்மிடம் உள்ளதை வைத்து நம்மால் என்ன உருவாக்க முடியும் என்று சிந்தித்தாலே நமக்கு வெற்றி உண்டு என்கிற உந்துதலே என்னை இந்தக் குறும்படத்தை உருவாக்க வைத்தது"என்கிறார்.
இந்தக் குறும்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.விருது அங்கீகாரம் பற்றி இயக்குநர் கூறும் போது,
"இதுவரையில் இந்தப் படைப்பு நடிப்பிற்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இயக்குநர், சிறந்த குறும்படம், சிறந்த கதை, சிறந்த பாடல் என்கிற பல்வேறு வகையில் தேசிய அளவில் பல மாநிலங்களில் திரையிடப்பட்டு சுமார் 35 விருதுகளை வென்றுள்ளது.
மேலும் India Film House (Second Largest Short Film Depot) மற்றும் 23-ம் வருடம் Dada Saheb Phalke Film Festival –ல் official selection-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது"என்கிறார்.
காகிதம் குறும்படத்தை இயக்கி உள்ளவர் வினோத் வீரமணி.ஒளிப்பதிவு ராம்தேவ் ,இசை எம். எஸ். கிருஷ்ணா.
இதன் முதல் டீஸர் மற்றும் சுவரொட்டி மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டுள்ளது.இளம் திறமையாளர்களை வாழ்த்தி வரவேற்று ஊக்குவிக்கும் விஜய் சேதுபதியின் டீஸர் வெளியீடு படக் குழுவினருக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது.
No comments:
Post a Comment