Saturday, August 19, 2023

*ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாஹைலைட்ஸ்*

*ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாஹைலைட்ஸ்*
*ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்* 
மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. 
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, காணேஷ், ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் துவக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் திரு தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசின் துணை உயர் கமிஷனர் MD.அரிபுர் ரஹ்மான், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, திருமதி ஐரின் குஞ்சுமோன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி ஜென்டில்மேன்-ll படத்தை துவங்கி வைத்தனர்.

படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளாப் போர்டை இயக்குநர் ஏ.கோகுல் கிருஷ்ணாவிடம் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வழங்கினார்.

இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆளுயர மாலை அணிவித்து தலைப்பாகையும் சூட்டப்பட்டு கவுரவம் செய்யப்பட்டது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என கணித்து சொன்ன மூன்று நபர்களில் இருவருக்கு இசையமைப்பாளர் கீரவாணியின் கைகளால் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. இன்று வருகை தர இயலாத ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது,

*இந்த நிகழ்வில் *மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது,*

 “இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் இந்த ஜென்டில்மேன் 2 படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்த வந்திருக்கின்றனர். இந்த படத்தின் பணிகளை கொரோனாவுக்கு முன்பே ஆரம்பித்தோம். நானும் இயக்குனர் செந்தமிழனும் இந்த படத்திற்கான கதையை உருவாக்கினோம். எப்போதுமே கதைக்கு ஏற்ற மாதிரியான ஆட்களை தான் தேர்வு செய்வேன். அதில் நான் பிடிவாதக்காரன். ஒவ்வொரு நபருமே ஜென்டில்மேன் ஆக இருந்து விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது. அதைத்தான் இந்த கதை சொல்கிறது.. இந்த படத்திற்காக நான் அட்வான்ஸ் கொடுத்தபோது கீரவாணி, வைரமுத்து இருவருமே அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள், என்னுடைய குருவாக இருந்த ஜீவி ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பிரச்சனைக்கு அது தீர்வு அல்ல.. எனக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இங்கே அனைவரும் வந்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமானை வைத்து நான்கு படங்களை எடுத்துள்ளேன். இயக்குனர் ஷங்கரை வைத்து படம் பண்ணியுள்ளேன். 100 படங்களுக்கு மேல் விநியோகஸ்தராக பணியாற்றி தான், தயாரிப்பாளர் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளேன். அதனால் எந்த படம் எப்படி ஓடும் என்கிற பல்ஸ் எனக்கு தெரியும். எப்போதுமே படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நஷ்டம் வராத மாதிரி தான் படம் எடுக்க வேண்டும். ஹீரோ ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ந்து வருகின்ற இளம் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படம் எடுப்பதுதான் எனது பாணி. அப்படித்தான் ஷங்கர், ஏ.ஆர் ரகுமான், கதிர் ஆகியோர் உருவானார்கள். 

இப்படத்தை துவங்குவதற்கான காரணம் என்று சொன்னால் அது இசையமைப்பாளர் கீரவாணி தான். இப்படத்தில் பணியாற்ற வேண்டுமென இசையமைப்பாளர் கீரவாணியிடம் நேரில் சென்று பேசியபோது அவர் படத்தின் கதை, கதாநாயகன், இயக்குனர் யாரென்று எல்லாம் கேட்கவில்லை. குஞ்சுமோன் சாருக்காக இந்த படம் பண்ணுகிறேன் என்றார். இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடல் வரிகளை படமாக்க வேண்டும் என்றால் ஐநா சபையை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றால் கிட்டதட்ட எட்டு கோடியாவது அந்த பாடலுக்கு செலவு பண்ண வேண்டும்” என்றார்.. 

*கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது,* 

“தயாரிப்பாளர் குஞ்சுமோன் படம் எடுக்க மூலதனமாக பயன்படுத்துவது பொன், பொருள், நிலம், பணம் எதுவும் அல்ல.. அவரது துணிச்சலை மட்டும் தான். 33 வருடமாக இந்த திரை உலகில் ஒரு தலைமுறையை கடந்துவிட்டார். இத்தனை வருடங்களில் அவர் பட்ட துன்பத்தை போல வேறு ஒரு மனிதனுக்கு நேர்ந்திருந்திருந்தால் ஒன்று அவன் துறவியாக சென்று இருப்பான்.. இல்லை அரசியல்வாதியாகி இருப்பான். ஆனால் குஞ்சுமோன் மீண்டும் படம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவேன் என்கிற லட்சியத்துடன் வந்துள்ளார். 

ஒரு தலைமுறையில் ஒரு வெற்றி பெற்றவர், இந்த இரண்டாவது தலைமுறையில் இரண்டு மடங்கு வெற்றி பெறுவேன் என்றுதான் ஜென்டில்மேன் 2 என தலைப்பு வைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது டென்சிங்கிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட திரும்பிச் செல்லாமல், “சிகரத்தை தொட்டாலும் சரி, சிகரத்தை தொட்டு இறந்தாலும் சரி.. முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என உறுதியாக இருந்தார். அந்தவிதமாக வெற்றியோ தோல்வியோ சினிமாவில் நானே உச்சமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருப்பவர் குஞ்சுமோன். அவரைப் பற்றி பேசுவதனால் ஒரு தனி அரங்கமே அமைத்து பேசலாம்.

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டபோது தனக்கு தோதான தன்னை புரிந்து கொண்டு, தன்னுடைய உயரத்திற்கு தன்னுடன் இணைந்து பயணிக்கின்ற ஒரு நபர் வேண்டும் என்று கேட்டபோது எஸ்.பி.பாலசுப்ரமணியம் கைகாட்டிய ஒரே நபர் இசையமைப்பாளர் கீரவாணி தான். அப்படி தன்னிடம் வந்த கீரவாணியைத்தான் மரகதமணி என்று பெயர் மாற்றி என்னிடம் ஒப்படைத்தார் பாலச்சந்தர்.

33 வருடங்களுக்கு முன்பு அவரிடம் நான் கண்ட அதே இசை இப்போது இல்லை அதைவிட பெரிய இசை இருக்கிறது அதே பண்பாடு, பணிவு, கனிவு எல்லாமே இருக்கிறது. ஜென்டில்மேன் என குஞ்சுமோனுக்கு அடுத்ததாக நான் கருத வேண்டியவர் கீரவாணி தான். இந்த படத்தில் கதாநாயகி பரதநாட்டியம் ஆடும் விதமாக உருவாகி உள்ள ஒரு பாடலுக்கு பூமி வெப்பமயமாதல் பற்றி உள்ளடக்கமாக வைத்துள்ளோம். இந்த பாடல் வெளியான பிறகு ஐநா சபையிலே  திரையிட்டால் அவர்களே நிச்சயம் கைதட்டுவார்கள்.

ஆஸ்கர் விருது கீரவாணியிடம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.. ஆனால் ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு அதிகம் உழைத்தாக வேண்டும். இல்லையென்றால் இவருக்கா ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தப்படத்திற்காக’ ஏற்கனவே மூன்று பாடல்களை கொடுத்து விட்டேன் வரும் செப்டம்பர்-1க்குள் மீதம் இருக்கும் மூன்று பாடல்களையும் கொடுத்து விடுவேன் என குஞ்சுமோனுக்கு உறுதி அளிக்கிறேன்.. நிச்சயமாக இந்த படத்திற்கும் கீரவாணிக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும்” என்றார்
  
 *இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது,*

 “தமிழ்நாட்டுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை இங்கே சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். ஆனால் திடீரென பணி மாற்றம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே பிறந்தேன். அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன். 22 வருடமாக சென்னையில் தான் இருந்தேன். அதன்பிறகு தெலுங்கு படங்களுக்கு எல்லாம் அங்கே தான் பணியாற்ற வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் இருந்ததால் தொழில் நிமித்தம் காரணமாக ஹைதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் என்னை தமிழுக்கு அழைத்து வந்த குஞ்சுமோன் சாருக்கு நன்றி. குஞ்சுமோனை பார்க்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி தோரணை இருக்கும். அப்படி ஒரு போலீஸ் அதிகாரி ‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’ என சொல்வது போல என்னை அவர் அரெஸ்ட் பண்ணி விட்டார். அவரது இதயச்சிறையில் ஒரு கைதியாக நான் எப்போதும் இருப்பேன். எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும். இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. அப்படி நான் பூஜிக்கும் பாடல்களை எழுதிய பாடலாசிரியரே மீண்டும் என் படத்திற்கு பாடல் எழுதுவதை ஒரு ஆசிர்வாதமாக நினைக்கிறேன். நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்” என்றார். 

இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இயக்கம் ; ஏ.கோகுல் கிருஷ்ணா

இசை ; எம்.எம் கீரவாணி

பாடல்கள் ; கவிப்பேரரசு வைரமுத்து

ஒளிப்பதிவு ; அஜயன் வின்சென்ட்

படத்தொகுப்பு ; சதீஷ் சூர்யா

கலை ; தோட்டா தரணி  

சண்டை பயிற்சி ; தினேஷ் கார்த்திக்

சவுண்ட் டிசைனர் ; தபஸ் நாயக்

ஆடை வடிவமைப்பு ; பூர்ணிமா ராமசாமி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : CK. அஜய்குமார் 
மக்கள் தொடர்பு ; ஜான்சன்

No comments:

Post a Comment

"Celebrating Pongal with Unity: Special Hampers Distributed by South Indian Cinema Press Club"

On the occasion of the Tamil festival of Pongal, special arrangements were made by the South Indian Cinema Press Club for its me...