*“ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” ; நம்பிக்கை தெரிவித்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா*
*“நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ?” ; இறுகப்பற்று படத்திற்காக ரிஸ்க் எடுத்த நடிகை அபர்ணதி*
*“என்னையே நான் புரிந்து கொள்ள இறுகப்பற்று படம் உதவி இருக்கிறது” ; விதார்த் நெகிழ்ச்சி*
*“விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு*
*“எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்” ; இறுகப்பற்று இயக்குனருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் பாராட்டு*
*“சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு” ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு*
*“என் மனைவிக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு தான் இறுகப்பற்று” ; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம் பிரபு*
*“நான் இனி அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா ?”; இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ஓபன் டாக்*
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’.
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.
வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இன்றைக்கு உலகமெங்கும் ‘மைய குடும்ப உறவு முறை’ தான் இருக்கிறது. கூட்டமாக இருந்தபோது வராத சிக்கல் இப்போது வெடித்திருக்கிறது. நவீன வாழ்க்கையில் கணவன், மனைவி பிரச்சனை நரக வேதனையாக இருக்கிறது. அந்த சிக்கலை ஆணித்தரமாக அலசும் படம் தான் இந்த ‘இறுகப்பற்று’. ஆண், பெண் இருவருக்குமான ஈகோ தான் இதற்கு காரணம். நான் படம் பார்த்து விட்டேன். நிறைய இடங்களில் கண்கலங்கினேன். படம் பார்க்கும்போது ஒரு பயமும் வந்தது. காரணம் இப்போதுதான் என்னுடைய திருமண வாழ்க்கையே ஆரம்பித்திருக்கிறது. இந்த படம் வெளியாகும்போது ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” என்றார்.
படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பேசும்போது, “ஸ்கிரிப்ட்டில் நன்றாக இருக்கும் விஷயங்களை சினிமாவில் சொல்லும்போது சில நேரங்களில் அது பார்வையாளர்களிடம் சரியாக ரீசாகாமல் போய்விடும். ஆனால் இயக்குநர் யுவராஜ் அதை தெளிவாக கையாண்டு திரையில் கொண்டு வந்துள்ளார். படத்தில் நடித்தவர்களின் காட்சிகளை வெட்டுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். கணவன், மனைவியாக படம் பார்க்க வருபவர்கள் படம் முடிந்து போகும்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்து விட்டுதான் வீட்டுக்கு செல்வார்கள்: என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, “இயக்குநர் யுவராஜுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்து, அவரிடம் கதை கேட்டதுமே இவருக்கும் நமக்கும் செட்டே ஆகாது என்கிற எண்ணம் தான் தோன்றியது. ஆனால் இரண்டாவது சந்திப்பில் இருந்து அது மாறியது. அவர் ஒரு குழந்தை மாதிரி. விக்ரம் பிரபு சின்னச்சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்களால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். விதார்த் அபர்ணதி ஜோடியுடன் எல்லாரும் தங்களை எளிதாக தொடர்புபடுத்தி பார்பார்கள். குறிப்பாக அபர்ணதி இந்த படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார் படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்து விடும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “ஒளிப்பதிவாளர் கோகுல் இவ்வளவு பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. அந்த அளவுக்கு படம் அவரை ஈர்த்திருக்கிறது. எனக்கும் இப்போதுதான் திருமணம் நடந்தது. எனக்கு இந்த படம் ஒரு நல்ல டீச்சர் மாதிரி என்று சொல்வேன்.. அதேசமயம் ஒரு பிரச்சாரமாக இது இருக்காது. ஆனால் படம் முடிந்து செல்லும்போது எல்லோரும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்வீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.
நடிகை அபர்ணதி பேசும்போது, “தேன் படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். இயக்குநர் யுவராஜ் முதலில் ஸ்கிரிப்ட் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என கூறினேன். அடுத்த நிமிடமே இந்த படத்திற்காக எனது உடல் எடையை கூட்ட வேண்டும் என்று கூறினார். இது என்ன சாதாரணம் தானே என நினைத்து உடல் எடையை கூட்ட ஆரம்பித்தாலும் மூன்று மாதம் ஆகியும் கூட என்னால் அவர் சொன்ன அளவிற்கு எடையை கூட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட இந்த படத்திற்கு நான் செட்டாக மாட்டேன் என்றே சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் தான் ஒரு சரியான டயட்டீசியனை விதார்த் எனக்கு கைகாட்டினார். அவரது ஆலோசனையை கடைபிடித்து எடையை கூட்டினேன். காலையில் துவங்கி எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கே அதிக பட்ஜெட் ஆனது. ஒரு கட்டத்தில் சாப்பிடவே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ? எடையை கூட்டி குறைப்பதற்கு.. ஆனாலும் இதை ஒரு சேலஞ்சாக எடுத்து பண்ணினேன். இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு விதார்த்தம் தான் காரணம். பார்க்க பர்கர் மாதிரி இருக்கிறேனே, ஆனால் ஸ்கிரீனில் காட்டமாட்டேன் என்கிறார்களே என நினைத்து ஆர்வமுடன் ஸ்பாட்டுக்கு போனால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேறு மாதிரி என்னை காட்டிவிடுவார். இந்த படத்தில் நடித்தது எனக்கு பெருமை. நிச்சயமாக இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த படம் துவங்கியதிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளியே வர ஒன்றை வருடம் ஆனது. இடையில் விளம்பர படம், ஆல்பம் என தேடி வந்த சில வாய்ப்புகளையும் இதனால் மிஸ் செய்தேன்” என்று கூறினார்.
நடிகர் விதார்த் பேசும்போது, “இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பும்போதே, ‘கரெக்டா பேசு’ என என் மனைவி சொல்லித்தான் அனுப்பி வைத்தார். என் வீட்டு சமையலறையில் பெரும்பாலும் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். என் பாட்டும் அங்கே ஒலிக்காதா என்கிற ஒரு ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது இந்த படத்தின் மூலம் அதை நிறைவேறியுள்ளது. நானும் விக்ரம் பிரபுவும் ஒரே இடத்தில் இருந்து அறிமுகமானவர்கள் தான். இந்த படத்தில் இப்போது இணைந்து நடித்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி. அபர்ணதிக்கு பெரிய உதவி எல்லாம் நான் செய்யவில்லை. கைகாட்டும் வேலை மட்டும்தான் என்னுடையது. மற்றபடி உழைப்பு அவருடையது தான். எனது திருமண பத்திரிகையை எல்லோருக்கும் கொடுத்தபோது, பலரும் திருமண வாழ்க்கை குறித்து அறிவுரை சொன்னது பயமாக இருந்தது. ஆனால் நான் பயந்தது போல தான் நடந்தது. ஆனால் யாரிடம் போய் கேட்டாலும் அவர்களும் அதையே தான் சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் யுவராஜ் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். நான் எவ்வளவோ படங்களை என்னை அறியாமலேயே கூட சில காரணங்களால் மிஸ் பண்ணியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நினைத்தேன். இப்படி ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, “என்னை மனதில் வைத்து தான் பேசினாயா” என என் மனைவி கேட்டார். மனைவி சொல்வதை புரிந்து கொள்வதை விட, அது தப்பு என சொல்வதில் தான் குறியாக இருந்தேன். இப்போது மாறிவிட்டேன். மொத்தத்தில் என்னை நான் புரிந்து கொள்ள இந்த படம் உதவி இருக்கிறது” என்று கூறினார்.
நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பேசும்போது, “தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது, இது என் திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எனக்கு தெரிந்திருக்கவில்லை. இயக்குநர் யுவராஜ் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த படத்தின் கதையை விவரித்தார். இதில் நடித்துள்ள எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படத்தில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்த படம் எல்லாருக்குமே ஸ்பெஷல். எஸ்ஆர் பிரபு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கு என்று என்னை அழைத்தபோது, அவரே இப்படி சொன்னால் நிச்சயமாக அதில் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 15 நிமிடம் கதை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க எல்லா நடிகர்களும் விரும்புவார்கள். முழு கதையையும் நான் படிக்கவில்லை.. அதேபோல இன்னும் படமும் பார்க்கவில்லை.. ஜஸ்டின் பிரபாகரன் பாடல் உருவாக்கும் காட்சியை நேரில் பார்த்து பிரமித்தேன். ஒளிப்பதிவாளர் கோகுல் படப்பிடிப்பு தளத்தில் அதிகம் பேசாமலேயே அனைவரிடமும் வேலை வாங்கியதை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அக்டோபர் எனக்கு ரொம்ப பிடித்த மாதம். காரணம் என் தாத்தாவின் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) பிறந்தநாள் அக்டோபர் 1ஆம் தேதி தான் வருகிறது. என் மனைவியின் பிறந்த நாளும் அக்டோபர் 6ஆம் தேதி தான். இந்த படமும் அக்டோபர் 6ல் தான் வெளியாகிறது. அதனால் உனக்காகத்தான் இந்த படமே என்று சொல்லி அவரை குளிர்வித்து விட்டேன். என்னை ஒரு நடிகராக தொடர்ந்து நிலைநிறுத்த உதவி வரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு எனது நன்றி” என்று கூறினார்.
இயக்குநர் யுவராஜ் தயாளன் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷனுக்காக நாங்கள் வெளியிட்ட 8 நிமிட ‘கேப்’ வீடியோ பற்றி பேசுவதா, இல்லை என்னுடைய திரையுலக பயணத்தில் விழுந்த 8 வருட ‘கேப்’ பற்றி பேசுவதா என்கிற எண்ணம் தான் இங்கே வந்ததில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது. எட்டு வருடத்திற்கு முன்பு என்னுடைய முந்தைய படத்தின் பத்திரிகையாளர் காட்சி இதே இடத்தில் நடந்தபோது இங்கிருந்து கிளம்பி போனவன் இப்போதுதான் மீண்டும் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு காமெடி படங்கள் தான் பண்ண வேண்டும் என நினைத்து நான் அந்த படங்களை இயக்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை படத்தின் ஹீரோவுக்காக பயன்படுத்திக் கொண்டேன். இன்று கூட வடிவேலுவிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.
என்னை மாதிரி ஒரு தோல்வி பட இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு வெற்றியை பரிசாக கொடுத்துவிட்டு அவரைப் பற்றி நிறைய பேசுவேன். சினிமாவை விட்டு விலகி வெகு தூரம் போனாலும் ஒரு நல்ல படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் என் நண்பர் கமல்நாத் மூலமாக தயாரிப்பாளருடன் சந்திப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கதை சொல்லப்போய் கசப்பான அனுபவம் நிறைய ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கே எனது முந்தைய தோல்விகளை பார்க்காமல், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டு தொடர்ந்து என்னை ஊக்கம் கொடுத்து இந்த படத்தின் கதையை உருவாக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களிடம் ஒரு நெருப்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, நானே சாம்பலாகி விட்டேன் என்னிடம் என்ன நெருப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சின்ன கங்கு ஒன்றை என்னுள் பார்த்தவர்கள் அதை பெரிய நெருப்பாக மாற்றினார்கள். இந்தப் படத்தின் மூலம் எனது நேர்மையை நான் உங்களுக்கு காட்டுகிறேன். இதற்கு பிறகு நான் அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். யுவராஜ் மென்மையாக பேசக்கூடியவர். ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லலாம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யாருடைய மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை இறுகப்பற்று படத்தில் அழகாக செய்து இருக்கிறார் இயக்குநர் யுவராஜ். இந்த படம் பற்றி பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாத நிலையில் என்னை பார்க்கும் திரை உலகை சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கெனன அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்து இருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.
கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் ஒரு சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன். சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே எந்த ஓடிடிடியில் வெளியாகிறது என்று தான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சின்ன படங்கள் மூலமாகத்தான் தங்களது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என பல கலைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சின்ன படங்களும் சினிமாவை தாங்கி தான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான்.. ஆனால் அவற்றுக்கென ஒரு வியாபாரம் அப்போதிருந்தே இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறுபடங்கள் தான் சினிமாவில் முதுகெலும்பு. அதுக்கு எதிராக சொல்லப்படும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வால் சொல்லப்பட்டது தான்.
இந்த படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது” என்றார்.
Johnson Pro
No comments:
Post a Comment