*“லேபிள் எனக்கு அடையாளம் தரும்.. -நடிகர் அரிஷ் குமார் நம்பிக்கை*
*“போலீஸ் கேரக்டர் என் திரையுலக பயணத்திலும் மேஜிக்கை ஏற்படுத்தும்” ; ‘லேபிள்’ வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்பார்க்கும் அரிஷ் குமார்*
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ராஜ்கிரண், மீனா, வடிவேலு என புகழ்பெற்ற பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘இது காதல் வரும் பருவம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அரிஷ் குமார்.
தனது படத்திற்காக இவரைத் தேர்ந்தெடுத்த பின்னர் தான், அரிஷ் குமார் திரையுலகில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபல படத்தொகுப்பாளர் கணேஷ்குமாரின் மகன் என்பதே கஸ்தூரி ராஜாவுக்குத் தெரிய வந்தது.
அந்த அளவிற்கு தந்தையின் பெயரைக் கூட தனது சிபாரிசுக்காக பயன்படுத்திக்கொள்ள விரும்பாமல் தனது திறமையை மட்டுமே முன்னிறுத்தி ஒரு நடிகராக கடந்த 18 வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார் அரிஷ் குமார்.
மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் என முத்தான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தாலும் நட்பையும் அறிமுகத்தையும் பயன்படுத்தி வாய்ப்பு பெற விரும்பாததாலோ என்னவோ இடையிடையே இவரது நடிப்பு பயணத்தில் அவ்வப்போது சிறிய தேக்கம் ஏற்பட்டது.
தற்போது இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஜெய், தான்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி இருக்கும் ‘லேபிள்’ என்கிற வெப்சீரிஸில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் அரிஷ் குமார்.
‘லேபிள்’ வெப் சீரிஸ் குறித்தும் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அரிஷ் குமார்.
“எத்தனையோ ரீமேக் படங்கள் வந்து போகின்றன. எல்லாமே தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ஹிந்தி ரீமேக்காக வெளியானாலும் கூட அதில் நம் சமூக நீதிக்கான விஷயங்களை அழுத்தமாக பேசி இருந்தார் அருண்ராஜா.
அவரது எழுத்துக்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த படம் பார்த்துவிட்டு உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
அப்படியே அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பும் எனது ஆசையையும் வெளிப்படுத்தினேன். பெரும்பாலும் நான் இதுபோன்று நட்பை பயன்படுத்தி வாய்ப்புகள் தேட விரும்புவதில்லை.
ஆனால் சிலரது படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்படும் தானே..??! அப்படித்தான் அருண்ராஜா காமராஜிடம் எனது விருப்பத்தைக் கூறினேன். அவரும் அதை மறவாமல் மனதில் வைத்து, தான் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை எனக்கு கொடுத்தார்.
வெப் சீரிஸ் என்கிறபோது அதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வெப் சீரிஸில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
‘லேபிள்’ என்றால் ஒரு அடையாளம்.. ஒரு பிராண்ட்.. அந்த வகையில் இந்த லேபிள் மூலம் நான் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன்.
இதுவரை வெளிவந்த வெப் சீரிஸ்களில் இருந்து சற்று வித்தியாசமாக அதே சமயம் ஹை குவாலிட்டி ஆக இது உருவாகி உள்ளது. இதை வெப் சீரிஸ் என்று சொன்னாலும் இதை ஒரு திரைப்படமாகத்தான் பார்க்கிறார்கள். மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளுடன், பாடல்களும் இதில் இருக்கிறது.
பெரும்பாலும் பல பேர் சினிமா மீதான மோகத்தில் தான் இங்கே வருகிறார்கள். ஆனால் சில பேர் மட்டும் சினிமாவிற்குள் வந்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வருவார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் அருண்ராஜா காமராஜ்.
சமூக நீதியை தெளிவாக பேசக் கூடிய ஒரு இயக்குநராகத்தான் அவரை நான் பார்க்கிறேன். இந்த லேபிளிலும் மிகப்பெரிய ஒரு விஷயத்தைப் பேசி இருக்கிறார்.
இதுதான் நான் நடித்துள்ள முதல் வெப் சீரிஸ். சினிமா, வெப் சீரிஸ் இரண்டுக்குமே நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே மாதிரியான உழைப்பைத் தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இரண்டும் வெளியாகும் தளங்கள் வெவ்வேறு என்றாலும், வெப் சீரிஸ் ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்து நிற்கும். இரண்டு மணி நேர படத்தில் ஒரு ரசிகனை பல சமயங்களில் கன்வின்ஸ் செய்வது இயலாத காரியம். ஆனால் ஒரு வெப் சீரிஸ் ஏதோவொரு இடத்தில் ரசிகனை திருப்திப்படுத்தி விடும். அதுதான் இந்த இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு திரைப்படத்தில் நடித்த அனுபவம் தான் இதில் எனக்கு கிடைத்தது.
இனி வேறு வெப் சீரிஸ்களின் நடிக்கும்போது தான் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா எனப் பார்க்க முடியும்..
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறேன். முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு விதமான சினிமா ட்ரெண்டிங்கில் இருக்கும். இப்போதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. ரசிகர்களின் டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் எந்த ட்ரெண்டிங்கில் நாம் படம் பண்ணப் போகிறோம் என்பதற்குள் அடுத்து புதிய ட்ரெண்டிங் வந்துவிடுகிறது. இப்படி ஆறு வருடம் கழித்து உள்ளே வரும்போது எல்லாமே கொஞ்சம் புதிதாக மாறி இருந்தது. இந்த இடைவெளி கூட எனது தவறினால் நிகழ்ந்தது தான்..
இப்போது அருண்ராஜாவிடம் வாய்ப்பு கேட்டது போல எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களை அணுகி வாய்ப்பு கேட்டு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்று இருக்க வேண்டும். அதை உணர்வதற்கு கொஞ்சம் காலம் அதிகமாகவே ஆகிவிட்டது. நாம் தட்டும் எல்லா கதவும் நமக்காக திறக்கப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு கதவு திறக்கும்.. தட்டுவதை மட்டும் நாம் நிறுத்தக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன்.
இந்த வெப் சீரிஸை வெறும் 70 நாட்களில் எடுத்து விட்டார் அருண்ராஜா காமராஜ்.
ஒரு திரைப்படத்திற்கு ஆகும் நாட்களை விட இது குறைவுதான். ஆனால் இதை வெப் சீரிஸ் ஆக பார்க்கும்போது இவ்வளவு குறுகிய நாட்களில் எடுத்தது போன்றே தெரியாது. அந்த அளவிற்கு அருண்ராஜா காமராஜின் கடின உழைப்பு இதில் இருக்கிறது. ஆனாலும் அவர் படப்பிடிப்புத் தளத்தில் டென்ஷன் ஆவதோ அலட்டிக் கொள்வதோ கிடையாது.
ஒரு இளைஞனை ஒரு வெற்றி ஓரிடத்தில் நிறுத்தி வைக்கும்போது அவனுக்குள் இருக்கும் ஒரு கோபம், பதற்றம் இருக்கும்.., நம்ம கரெக்டா இருக்கணும் என்ற ஒரு எமோஷன் இருக்கும் இல்லையா.. அதெல்லாம் எதுவுமே அருண்ராஜாவிடம் கிடையாது. இது ஆக்சன் படம் என்றாலும் அவ்வளவு ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார்.
அதேபோல ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் வெகு திறமையாக காட்சிகளைப் படமாக்கினார். வெப் சீரிஸ் என்றாலே இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு தனது மிரட்டலான பின்னணி இசையால் தாங்கிப் பிடித்து வருகிறார்.
நம் தமிழ் சினிமாவில் நமக்கு கிடைத்த மிகச்சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் என்பதில் சந்தேகமே இல்லை.
‘லேபிள்’ வெப் சீரிஸைத் தொடர்ந்து ‘கண்ணதாசன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். இந்த படத்திலும் எனக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம்தான். கதையும் வித்தியாசமான ஒன்றுதான். சுகன் குமார் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநராக மாறியவர் இவர்.
லேபிள் வெப் சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்ணதாசன் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என வந்து கதை சொன்னார்கள். எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இரண்டிற்குமே நடிப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி இருக்கிறேன்.
பொதுவாகவே ஒரு நடிகருக்கு போலீஸ் படங்கள் அவரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பார்கள்.. நாமும் நிறைய பார்த்திருக்கிறோம். என்னுடைய திரையுலக பயணத்திலும் அந்த மேஜிக் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கண்ணதாசன் படத்தை தொடர்ந்து இன்னொரு வெப் சீரிஸிலும் நடிக்கிறேன். அதற்கான படப்பிடிப்பும் துவங்கி விட்டது.
சினிமாவில் ஒன்று ஜெயிக்கும், ஒன்று தோற்கும், ஒன்று வாழவைக்கும் என்று சொல்வார்கள்.. ஒன்றே ஒன்று இதையெல்லாம் செய்துவிடும் என நம்பி இருந்ததால் தான் இந்த இடைவெளியும் தாமதமும் ஏற்பட்டது. இனி கதைக்காக காத்திருப்பது, நல்ல படத்திற்காக காத்திருப்பது என்பதைத் தாண்டி கிடைக்கிற வாய்ப்பில் எப்படி கோல் அடிப்பது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்பார்கள். நான் தொலைக்கவில்லை.. தொலைந்து விட்டேன். இப்போது நானே என்னைத் தேடிக் கண்டுபிடித்து இருக்கிறேன். அந்த விஷயத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க நினைக்கிறேன்.
நான் நடித்த "மிக மிக அவசரம்" திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளைத் தொட்டுள்ளது. ஒரு இயக்குநராக சுரேஷ் காமாட்சி நல்ல கருத்து கொண்ட அற்புதமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தார்..
அவரது டைரக்சனில் மீண்டும் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.
சுரேஷ் காமாட்சி அண்ணன் போல ஒருவர் நமக்கு துணையாக இருப்பது சினிமாவில் மிகப்பெரிய பலம்” என்கிறார்.
No comments:
Post a Comment