Thursday, March 28, 2024

*“தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” ; மேடையிலேயே பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி*

*“தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” ; மேடையிலேயே பார்த்திபனிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட தேவயானி*
*“அழகி-2’வுக்காக நான் காத்திருக்கிறேன்” ; தயாரிப்பாளரிடம் பார்த்திபன் வேண்டுகோள்*
*‘அழகி-2’வை இயக்குவது தங்கர் பச்சானா ? பார்த்திபனா ? ; சாதுர்யமாக பதில் சொன்ன பார்த்திபன்*  
*“அழகி வெளியான சமயத்தில் பிறக்காதவர்கள் கூட இந்த படத்தை அழகாக ரசிப்பார்கள்” ; நம்பிக்கையுடன் ரீ ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்*

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது..
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி, இளம் வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீபன், ராமு சரவணன், கட்டையன், கட்டச்சி கதாபாத்திரங்களில் நடித்த செல்வம், சரஸ்வதி, அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் K.M.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர் கருணாநிதி, இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் தங்கர் பச்சான் பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் தேர்தல் பணிகளில் இருப்பதாலும் நந்திதா தாஸ் மும்பையில் இருப்பதாலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலயவில்லை என்பதை தொகுத்து வழங்கிய சுதர்சன் குறிப்பிட்டார். 

பாடலாசிரியர் கருணாநிதி பேசும்போது, “இளையராஜாவின் இசையில் பாடல்கள் படத்திற்கு தூணாக இருந்தன. இந்தப்படத்தில் சமூகத்தின் பல பிரச்சனைகளை இயக்குநர் தங்கர் பச்சான் சொல்லியிருக்கிறார். நடிகைகளின் சிவாஜி என்றால் தேவயானி தான்” என பாராட்டினார்.

கட்டையன் கதாபாத்திரத்தில் நடித்த செல்வம் தற்போது இந்தியன் கப்பற்படை வீரராக பணியாற்றி வருகிறார். அவர் பேசும்போது, “22 வருடங்கள் கழித்து இந்தப்படம் மறு பொழிவு பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விவரமே தெரியாத வயதில் எங்களை அழைத்து வந்து வசனங்கள் சொல்லிக் கொடுத்து இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுத்த தங்கர்பச்சான் சாருக்கு நன்றி. இரவின் நிழல்களாக இருந்த எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக இந்த படத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.

கட்டச்சி கதாபாத்திரத்தில் நடித்த சரஸ்வதி பேசும்போது, “நான் இப்போது மூன்று குழந்தைகளுடன் குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். நான் நடித்த படத்தை மறுபடியும் என் குழந்தைகளுடன் பார்ப்பது மிகப்பெரிய சந்தோஷம். தங்கர் பச்சான் சார் 22 வருடம் கழித்து என்னை தொடர்பு கொண்டு அழைத்தார். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. அவருடைய ஞாபகத்தில் நான் இருப்பேனா என்கிற சந்தேகம் இருந்தது. இங்கே வந்த சமயத்தில் அவரை பார்க்க முடியவில்லை என்கிற ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் இருக்கிறது” என்று கூறினார்

எட்டு வயது சண்முகமாக நடித்த ராமு சரவணன் பேசும்போது, “நான் தான் ஓட்டை டவுசர் போட்டு கொண்டு வந்த சண்முகம். எட்டு வயதில் படம் பார்க்கும்போது எதுவுமே புரியவில்லை. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் இந்த படத்தை பார்க்கும்போது தினமும் இந்த படத்தை பார்க்க வேண்டியதாகிவிட்டது. அந்த அளவிற்கு பிடித்து விட்டது. இப்போது இருக்கும் இளைஞர்களுக்கும் ரொம்பவே இந்த படம் கனெக்ட் ஆகும்” என்று கூறினார்.

15 வயது சண்முகமாக நடித்த சதீஷ் ஸ்டீபன் பேசும்போது, “22 வருடம் போனதே தெரியவில்லை. ஆனால் அழகியை பற்றி தினசரி யாராவது ஒருவர் எங்கேயாவது பேசிக் கொண்டுதான் இருப்பேன். அழகி என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு படம். இந்த படம் எடுத்த சமயத்தில் பள்ளிப்பருவம் என்பதால் இது எந்த வகையான படம் என்பது அந்த அளவிற்கு எனக்கு புரியவில்லை. விவரம் தெரிந்த போது பார்த்த பின்னர் தான் இப்படி ஒரு காவியமான படத்தில் நடித்திருக்கிறோம் என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது. படப்பிடிப்பு சமயத்தில் தங்கர் பச்சான் சார் கூறும்போது 25 வருடம் ஆனால் கூட இந்த படம் மீண்டும் அனைவரிடமும் கனெக்ட் ஆகும் என்று கூறினார். இப்போது இருக்கும் காலகட்டத்தில் காதல் என்பது எல்லோருக்கும் எளிதாக கிடைத்து விடுவதால் அதன் வலிமையோ, அழகோ அவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் சண்முகம் கதாபாத்திரம் தான் விரும்பும் பெண்ணுக்கு எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் தனது காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்த சமயத்தில் வணிகரீதியான படங்கள் அதிகமாக வந்த நேரத்தில், காதலை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டு வந்த படம் தான் அழகி. அதில் நடித்த அனைவருக்குமே மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது” என்று கூறினார்.

அழகியை ரீ ரிலீஸ் செய்யும் மீனாட்சி சுந்தரம் பேசும்போது, “இதற்கு முன்பு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை ரிலீஸ் செய்தேன். 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு காதலர் தினத்தன்று 96 படத்தையும் ரிலீஸ் செய்தேன் அந்த படத்திற்கு சரியாக தமிழகம் முழுவதும் 96 தியேட்டர்கள் அமைந்தது. அதேபோல இந்த அழகி படமும் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும் என இதன் ரீ ரிலீஸ் பணிகளில் இறங்கினேன். தமிழகத்தில் 50 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இன்றைய இளைஞர்களுக்கு தங்களது கடந்த காலத்தை நினைவு கூறுவதற்கு ஒரு ஆதாரமாக இந்த படம் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

அழகி படத்தின் இணை இயக்குநரும் தற்போதைய சின்னத்திரை இயக்குனர் சங்கத்தின் தலைவருமான தளபதி பேசும்போது, “படம் வெளியாகி 22 வருடம் ஆகியும் கூட இப்போது வரை இந்த படம் குறித்து பல தகவல்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் துவங்கிய காலத்தில் நானும் தங்கர் பச்சான் இருவரும் தயாரிப்பாளர் உதயகுமாரை சந்தித்து இந்த கதையை கூறி அன்றே அவரிடம் சம்மதம் பெற்றோம். இந்த படத்திற்கு முக்கிய நட்சத்திரங்களை எளிதாக தேர்வு செய்து விட்டோம்.. ஆனால் சிறுவயது கதாபாத்திரங்களை தேடுவதற்காக பல பள்ளிக்கூடங்களுக்கு நேரிலேயே சென்று மாணவர்களை தேர்வு செய்தோம். அப்படி நாங்கள் ஒரு பள்ளிக்கு சென்ற போது எங்களைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினோம். அப்படியே பார்த்திபன் சார் சாயலில் அச்சு அசலாக இருந்த அவரை பார்த்து ஆச்சரியப்பட்டு போனோம். ஆனால் அவர் உண்மையிலேயே தூங்கவில்லை என்பதும் எங்கே பார்த்திபன் போல சாயலில் இருக்கும் தன்னை பார்த்தால் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயத்தில்தான் அப்படி செய்ததாக பின்னாளில் கூறினார்.

அதேபோல இளம் வயது நந்திதா தாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா தேர்வு செய்யப்பட்டதும் கூட ஒரு சுவாரஸ்யம் தான். கிட்டத்தட்ட அதே வயதில் உள்ள 25 பெண்களை ஆடிஷன் செய்து அதில் ஜெனிபர் என்கிற ஒருவரை தேர்ந்தெடுத்து மறுநாள் படப்பிடிப்பிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது ஏதேச்சையாக நடிகர் சங்கம் சென்றபோது அங்கிருந்த ஒருவர் மூலமாக மோனிகாவின் புகைப்படம் கிடைத்தது பின்பு அவரை வரவழைத்து ஆடிசன் செய்த போது நந்திதா தாஸின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார். அதன்பிறகு மறுநாள் நேராக படப்பிடிப்பிற்கு கிளம்பி வந்தார்.

இந்தப் படத்திற்கான வேலைகளை துவங்கிய போது நாயகியாக நடித்த நந்திதா தாஸ் என்னை அழைத்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். காரணம் எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.. குறைவாகத்தான் உங்களுக்கு வசனம் இருக்கும் என சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்போது அதிகப்படியான வசனங்களை எனக்கு அனுப்பி உள்ளீர்கள் என்று கூறினார். பிறகு அவர்களை சமாதானம் செய்து வசனங்களை இன்னொரு வெர்ஷன் எழுதி அவரை நடிக்க வைத்தோம்.

பார்த்திபன் சார் கூட சில முறை கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். அவரை நான் தான் சமாதானப்படுத்தி அழைத்துப்பு வந்தேன். தேவயானி மேடத்திற்கு கூட அந்த நேரத்தில் ஒரு சிறிய கேப் விழுந்தது (இப்படி அவர் கூறியவுடனே அவரை திரும்பிப் பார்த்த தேவயானி, என்ன கேப் விழுந்தது ? என் திருமணமானதும் உடனே நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் படம் இதுதான்.. எந்த ஒரு கேப்பும் இல்லை என்று பதில் கொடுத்தார்). இந்த படம் தயாராகி முடிந்ததும் அப்போது முன்னணியில் இருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தனியாக படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்ற அவர் ஒரு வாரம் தயாரிப்பாளரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அலைக்கழித்த பின்னர் எதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள். இனிமேல் இந்த படத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். அது கூட நஷ்ட்டமாகத்தான் முடியும் என்று கூறினார். அப்போது தயாரிப்பாளர் எந்த அளவிற்கு வேதனைப்பட்டார் என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் இந்த படத்தை பார்த்தார்கள். பார்த்த அனைவருமே படம் முடிந்து தங்களை அறியாமல் கண்களை துடைத்துக் கொண்டு அழுததை நான் பார்த்தேன். ஆதலால் படம் உடனடியாக விற்றுவிடும் என நினைத்தால் அனைவருமே தயக்கம் காட்டினார்கள். அதை எல்லாம் தாண்டி அழகி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்துள்ளது. தயாரிப்பாளர் மனம் தளர்ந்த சமயத்தில் எல்லாம், இந்தப் படத்திற்கு என தனிக்கதை கிடையாது.. ஆனால் எந்த வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருமே இந்த படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள் என அவரை ஊக்கப்படுத்துவேன். இப்போது ரீ ரிலீஸின் போதுகூட அவர் சற்று தயங்கியபோது இந்த படம் வெளியான சமயத்தில் பிறக்காதவர்கள் கூட இந்த படத்தை அழகாக ரசிப்பார்கள் என்று அவருக்கு தைரியம் கொடுத்தேன்” என்று கூறினார். 

நடிகை தேவயானி பேசும்போது,

 “22 வருடம் கழித்து மீண்டும் எங்கள் படம் ரிலீஸாவது ஒரு மகிழ்ச்சியான தருணம். 22 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் போது இப்படி மீண்டும் ஒருமுறை ரீலீஸ் ஆகும் என அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. உண்மையிலேயே இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிராக்கிள். அப்போதும் நடந்தது.. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு சந்தோஷ தருணம். ஒரு திரைப்படம் தயாரிப்பது பிரசவம் போல தான்.. 22 வருடத்திற்கு முன்பு ஒரு படத்தை சிரமப்பட்டு தயாரித்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற பின்னர், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப். இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இத்தனை வருடம் கழித்து நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோமே, இதுவே சந்தோசமான விஷயம். இதில் நடித்த குட்டிக்குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். இதுபோன்ற அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இப்போது இருக்கிற இந்த தலைமுறையினருக்கு இதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவர்கள் இதிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடியும். 

என்னுடைய முதல் படமான காதல் கோட்டையில் தங்கர் பச்சான் சார் தான் ஒளிப்பதிவாளர். தேசிய விருது வரை அந்த படம் சென்றது. எனக்கும் பெரிய பெயர் கிடைத்து என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு மறுமலர்ச்சி எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு பாரதி படம் எடுத்தபோது அதில் என்னை செல்லமா கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னதே தங்கர் பச்சான் தான். இதேபோல அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர். அவரது ஒளிப்பதிவே ஒரு பெயிண்டிங் போல இருக்கும். அவருடைய ஒளிப்பதிவில் நாம் மேக்கப் போடவே தேவையில்லை. இயல்பாக வந்து நடித்துவிட்டு போகலாம். உணர்வுகளுடன் விளையாடக்கூடிய ஒரு படைப்பாளி அவர்.

என் திருமணம் முடிந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்கும்படி தங்கர் பச்சான் கேட்டார். என்னதான் காதல் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனைவி தனது கணவனை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்கிற அந்த கதாபாத்திர வடிவமைப்பு எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு உண்மையான கதாபாத்திரம் தான் வளர்மதி. அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அந்த அளவிற்கு அவர் படைப்பின் மீது நம்பிக்கை இருந்தது. இந்த படத்தை என்னுடைய மகள்களுடன் சேர்ந்து திரையரங்கில் சென்று பார்க்கப் போகிறேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள் என்று நினைக்கிறேன். பார்த்திபன் சாருடன் இணைந்து பல நல்ல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். அதில் அழகியும் ஒன்று.. 

இப்போது பார்த்திபன் சாரிடம் ஒரு கேட்கிறேன்.. உங்களுக்கு வளர்மதி பிடிக்குமா ? தனம் தான் பிடிக்குமா ?” என்கிற ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியையும் வீசினார்!
கேள்வியை  கேட்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தன்னை மறந்து கைதட்ட, இப்பவே பதில் சொல்லுங்க சார் என்று தேவயானி கேடக.. நான் பேசும் போது பதில் சொல்கிறேன் என்று சொன்னார். 

தயாரிப்பாளர் உதயகுமார் பேசும்போது, “இந்த படத்தில் நடித்த அத்தனை பேரின் முகத்திலுமே அந்த மகிழ்ச்சி தெரிகிறது. இதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ருட்டியில் சின்னச்சின்ன வீடுகளில் தங்கி கூட நடித்தார்கள். 22 வருடம் கழித்து இவர்களை எல்லாம் பார்க்கும்போது நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை பார்ப்பது போன்ற சந்தோச உணர்வு தான் ஏற்படுகிறது. இந்த அழகி படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என தோன்றியது என்றால் என்னுடைய டீனேஜ் வயதில் இருக்கும் பேரன்கள் எல்லோரும் இந்த அழகி படத்தை டிவியில் தான் பார்ப்பார்கள்.. அப்போது இதை நாங்கள் பெரிய திரையில் பார்க்க முடியாதா தாத்தா என்று என்னிடம் கேட்பார்கள். என் நண்பர்களும் இதே கேள்வியை கேட்டார்கள். அதன் பிறகு தங்கர்பச்சான், தளபதி ஆகியோரிடம் இது பற்றி பேசினேன்.. 20 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததால் இதன் ரீ ரிலீஸ் பற்றி கேட்டு அறிந்து கொண்டு இப்போது அதற்கான 4K, 5.1 சவுண்ட் போன்ற டிஜிட்சல் வேலைகளை எல்லாம் செய்து முடித்து திரைக்கு கொண்டு வந்துள்ளோம்.

அன்றைய பள்ளிக் காலங்களில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் விளையாடுவது, ஆற்றில் குளிப்பது என பல விஷயங்கள் கிடைத்தன. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அது எதுவுமே கிடைக்கவில்லை. இப்போது குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு பலவிதமான பாரத்தை கொடுக்கிறோம். அதேபோல அன்றைய காலகட்டத்தில் காதலை சொல்ல எப்படி எல்லாம் தயங்கினார்கள் ? சொல்லாமலேயே பல காதல் எப்படி போனது ? இன்று உடனடி காதல், உடனடி காதல் முறிவு என மாறிவிட்டது. பழைய படங்களை டிவியில் கூட பார்க்க இப்போது இருப்பவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் இந்த அழகியை ரீ ரிலீஸ் செய்கிறோம்” என்று கூறினார்.

நடிகர் பார்த்திபன் பேசும்போது, “தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார் சார் என்று என்னிடமே கேட்பார். நானே ஒரு டைரக்டர்.. என்னிடமே அப்படி கேட்பார். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்..  என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்கள் என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

இங்கே தளபதி பேசியது எல்லாமே உண்மை விஷயங்கள்தான்.. ஆனால் உண்மைக்கு நாட்டில் மரியாதையே கிடையாது. பொதுவாகவே விநியோகஸ்தர்களுக்கு என ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அதை அழகி போன்ற படங்களின் மூலமாக உடைத்தது எல்லாம் ரசிகர்கள் தான். நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பெயர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை.

சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நெருங்கி போயிருப்பார். பொதுவாக பெண்கள் குடும்பத்தை கவனித்து கொண்டு, கணவனை எல்லாவிதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும். இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும். காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன். (உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா தேவயானி ?) . தேவயானி கதாபாத்திரமும் அவர் அதில் நடித்த விதமும் சிறப்பாக இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம் எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன் என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து அந்த படத்தின் நடிக்க உதவிஎதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பலரும் இதில் பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன் தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்து தான் தற்போது 13 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் டீன்ஸ் என்கிற ஒரு அட்வென்சர் த்ரில்லர் படத்தை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் அது வெளியாகிறது.

அழகி படத்தை தேவயானி ஒரு மேஜிக் என்றார். அதையே தான் தமிழில் கண் கட்டு வித்தை என்று சொல்வேன். சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார். ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும். இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார். அதுதான் எத்தனை வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது. 

அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி-2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது. தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை.. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பார்த்திபன் தேவயானி பல சுவாரஸ்யமான பதில்களை அளித்தனர்,

“உங்களுக்கு நிஜத்தில் இதுபோன்று காதலிகள் இருந்திருக்கிறார்களா ? அவர்களை மீண்டும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டதா ? என்று பார்த்திபனிடம் கேட்டதற்கு, 
“நந்திதா தாஸை ரோட்டோரத்தில் பார்த்தபோது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதுபோல பலமுறை நிஜத்திலும் ஏற்பட்டுள்ளது, இன்னும் அது மாதிரி நிறைய முறை ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்னுடைய அடுத்த புத்தகத்தின் பெயர் கூட ‘வழிநெடுக காதல் பூக்கும்’ என்பதுதான்.. காதல் என்பது ஒரு முறை மட்டும் வந்து போய்விடாது. அது வந்து கொண்டே இருக்கும். அழகி படத்தின் ரீ ரிலீஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் தயாரிப்பாளர் எங்களுக்கு ஒரு சின்ன வீடாவது வாங்கி கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ஒரு பக்கம் புதிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் இப்படி பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டபோது, “எப்போதுமே நல்ல விஷயங்கள் பழையதாக இருந்தாலும் திரும்பத் திரும்ப அலைகள் போல மீண்டும் மீண்டும் தேடி வரும். இந்த அழகி படம் கூட தேவதாஸின் இன்னொரு வெர்ஷன் தான். இது ஒரு சிறந்த மைதானம். யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.. பொங்கல் தீபாவளி சமயத்தில் ஏன் பெரிய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் ? அந்த சமயத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.. காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதே ஒரு தீபாவளி, பொங்கல் போல பண்டிகை தானே..?

என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு ‘டார்க் வெப்’ என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய ‘டீன்ஸ்’ படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்.

ஒரு நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதை விட்டுவிட்டு ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக சென்று தேவயானி வேலை பார்த்தாரே அவர் தான் ‘அழகி’.. இல்லையில்லை பேரழகி. அழகி படத்தின் வெற்றிக்கு பிறகு நானும் நந்திதா தாஸும் அடிக்கடி பேசும் சமயத்தில், நான் ஒரு கதையை தயார் செய்தேன். ஆனால் அது அழகி 2 அல்ல. ஆனால் அதில் சண்முகம், தனலட்சுமி மட்டுமே இருப்பார்கள். அந்த கதையை கேட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அப்போது தங்கர் பச்சான் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ‘அழகி 2’ என்கிற பெயரில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டார். ஆனால் இப்போதும் நந்திதா தாஸ் இந்த படத்தை எப்போது துவங்குகிறீர்கள் எனக் கேட்டு வருகிறார். தங்கர் பச்சன் சார் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நான் வாழ்த்தியதற்கு காரணமே இந்த அழகி 2 படத்தை நான் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஒரு பயங்கர சுயநலவாதி.

அழகியின் 51 சதவீதம் இளையராஜா சார் தான்.. மீதி 49 சதவீதம் தான் நாங்கள். இந்த காலகட்டத்தில் ரஜினி சார் மட்டுமே பத்தாது என்று இந்த பக்கம் விஜய் சேதுபதி, அந்த பக்கம் இன்னொரு பெரிய ஹீரோயின் தேவைப்படுகிறது. மணிரத்னம் பத்தாது என்று இந்த பக்கம் கமல்ஹாசன் தேவைப்படுகிறார்.. அவர் பத்தாது என்று பகத் பாஸில் தேவைப்படுகிறார். இப்படி பெரிது பெரிதாக போராடிக் கொண்டிருக்கும்போது நான் வெறும் 13 திறமையாளர்களை மட்டுமே நம்பி ‘டீன்ஸ்’ என்கிற ஒரு படத்தை எடுத்து வருகிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் பெரிய அளவில் மரியாதை கொடுத்தால் அழகி படத்தில் இதேபோல் நடித்த இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து ஒரு படம் எடுப்பேன்” என்று கூறினார்.

- johnson PRO

No comments:

Post a Comment

*Actor John Kokken Starts the Year on a High Note with Major Releases and Exciting Lineups Across Languages*

John Kokken, known for his remarkable performances in blockbusters like Sarpatta Parambarai, Thunivu and Captain Miller, is off ...