*கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்*
*கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.*
புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக 'துர்கி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் 'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்', 'வடசென்னை', தேசிய விருது பெற்ற படமான 'காக்கா முட்டை', 'ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்', ' டக் ஜகதீஷ்', 'வானம் கொட்டட்டும்' என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
'உத்தரகாண்டா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் 'உத்தரகாண்டா' திரைப்படத்தில் 'கர்நாடக சக்கரவர்த்தி' சிவராஜ்குமார், 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.
தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகில் அறிமுகமாகி அங்கும் தன் முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment