தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
தயாரிப்பாளர் கோமதி பேசியதாவது…
இந்த விழாவிற்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் நன்றிகள். இது என் முதல் படம். எனக்கு மட்டுமல்ல, ஹீரோ, மியூசிக் டைரக்டர் என எல்லோருக்கும் இது முதல் படம். அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.
நடிகர், இயக்குநர் யூகி சேது பேசியதாவது…
நான் ஒரு படம் செய்துள்ளேன் அப்படத்தின் எல்லா பாடலுக்கும் ராதிகா தான் டான்ஸ் மாஸ்டர். இந்தப்படத்திற்குச் சரியான தலைப்பு பிடித்திருக்கிறார்கள். எல்லா மொழிக்கும் பொருந்துகிற மாதிரியான தலைப்பு. ராதிகா மாஸ்டரிடம் ஒரு மறைமுக திறமை இருக்கிறது. எந்த நடிகரும் அவரை வணங்கித் தான் ஷாட்டுக்கு போகிறார்கள், இயக்குநருக்குக் கூட அந்த மரியாதை இல்லை. ஒரு தலைமைப்பண்பு இயல்பிலேயே அவருக்கு வந்துவிடுகிறது. அதிலும் இப்படத்தில் அவர் மகன் தீபக்கை இசை அமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். 2024 சினிமாவுக்கு மிகக் கடினமான காலம். போட்டிகள் மிகப் பெரிதாக உள்ளது. உலகளவில் எடுக்கப்படும் சினிமாக்களில் 10 சதவீதம் தான் வெற்றி பெறுகிறது. உலகத்தில் படமெடுக்க மிகவும் கடினமான நாடு இந்தியா அதிலும் தமிழ்நாடு இன்னும் கடினமானதாக இருக்கிறது. இன்டர்வெல் விடும் பழக்கம் உலகிலேயே இங்கு மட்டும் தான் இருக்கிறது. ராதிகா அதையெல்லாம் எதிர்கொண்டு சாதித்துள்ளார். சிறிய படங்கள் சின்ன நட்டம், பெரிய படங்கள் ஏதாவது ஒன்று செய்து சமாளித்து விடுவார்கள், ஆனால் மிடில்கிளாஸ் மாதிரி மீடியம் பட்ஜெட் படங்கள் மாட்டிக்கொள்கிறது. அதைத்தாண்டி படமெடுத்துள்ளார் ராதிகா. டான்ஸ் மாஸ்டர் சாந்தி, ராதிகா இருவரையும் 25 வருடங்களாக தெரியும். மிகத்திறமையானவர்கள் இவர்கள் கண்டிப்பாக இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர் கோமதி, என் அம்மா பெயர் அவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது...
வாழ்த்த வந்துள்ள அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். இது என் குடும்பத்துப் படம். ராதிகா என் உயிர் நண்பனின் மகள். அவரை குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். இவர் வளர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களை ஆட வைப்பார் என நினைக்கவில்லை. மிகப்பெரிய உழைப்பாளி. அந்த திறமையில் தான் எழுத்து இயக்கத்தையும் செய்துள்ளார். டிரெய்லர் பார்த்தேன், எந்த குறையும் இல்லாமல் மிக நன்றாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக நடித்துள்ளார். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். இன்று சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை வெளியீடு வரை இவர்கள் கொண்டு வந்ததே மிகப்பெரிய சாதனை. இந்தப்படம் வெற்றி பெற்றால், இன்னும் பல சிறு முதலீட்டுப் படங்கள் வரும். அதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இசையமைப்பாளர் தீபக் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் சங்க தலைவர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது...
படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள், ஆனால் எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள் அது சில நேரம் ஹிட் ஆவதால் அதை சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப்பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம். பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். சிவாஜி சார் காலத்தில் இப்படியா இருந்தது ?. எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம் அது தான் டிரெண்ட். ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள் இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார் அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன் அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது. நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வாழ்த்துக்கள். அவர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது...
இத்திரைப்படத்தில் என் பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும், வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்த மேடையை மிக உணர்வுப்பூர்வமான மேடையாகப் பார்க்கிறேன். பேசுபவர்கள் அனைவரும் முழு மனதோடு வாழ்த்திப் பேசுகிறார்கள் அதற்குக் காரணம் ராதிகா மாஸ்டர் தான். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அன்பை மட்டுமே பரப்பியிருக்கிறார். அந்த அன்பு தான் இங்கு பிரதிபலிக்கிறது. பெண்களின் ஆசை நிறைவேறத் துணையாய் நிற்பது தான் சிறந்த ஆணின் பண்பு ஆகும். அது போல் தான் ராதிகா மாஸ்டரின் கணவர் இருக்கிறார். ராதிகா மாண்டரின் போராட்டம் எனக்குத் தெரியும் அவரின் விடாமுயற்சி தான் அவரை இன்று இயக்குநராக்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு எனும் களத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது. ராதிகா மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் மைம் கோபி பேசியதாவது…
ராதிகாவை நான் என் தங்கையாக மட்டுமே பார்க்கிறேன். நிறையப்படங்களில் நான் வேலை பார்த்துள்ளேன் அவ்வளவு அன்பாக பழகுவார். என்னையும் ஆட வைத்துள்ளார் எனக்கே பிடிக்கவில்லை ஆனாலும் ஆட வைத்துள்ளார். எனக்குக் கதை தெரியாது எதுவுமே தெரியாது அவருக்காக மட்டுமே, அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவர் இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் நடிப்பேன். ராதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள். தம்பி தீபக்கிற்கு என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ராதிகா மாஸ்டரின் முதல் பைலட்டில் நான் தான் நடித்தேன். அப்போதிலிருந்து அவரைத் தெரியும். நிறையப் போராடி இப்படத்தைக் கொண்டு வந்துள்ளார். இங்குள்ள அனைவருடனும் நான் ஒரு வகையில் வேலை பார்த்துள்ளேன். மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது படத்தில் வேலை பார்த்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடன இயக்குநர் மெட்டி ஒலி சாந்தி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். மிக பெருமையாக இருக்கிறது. கோமதி மேடத்திற்கு நன்றி. சினிமா இன்ட்ஸ்ட்ரி முதலில் வேறு மாதிரி இருந்தது. எல்லா மொழி படங்களும் இங்கு தான் தயாரானது. இப்போது அந்தந்த மொழி படங்கள் அங்கேயே தயாராகிறது, அதனால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை. கோமதி மேடம் இன்னும் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். கணவர்கள் நினைத்தால் மட்டுமே ஒரு பெண் சாதிக்க முடியும். தங்கள் மனைவிகளின் கனவிற்குத் துணையாக இருக்கும் கணவர்களுக்கு நன்றி. தீபக் அவனைச் சிறு குழந்தையாகப் பார்த்துள்ளேன், கீபோர்ட் வைத்து விளையாடிக்கொண்டிருப்பான், இப்போது இசையமைப்பாளர், என் பிள்ளையாகத் தான் அவனை நினைக்கிறேன் பெருமையாக உள்ளது. ராதிகா அவள் எனக்கு தங்கை, தோழி, போட்டியாளர் எல்லாம் தான். நாங்கள் இணை பிரியா தோழிகள் அத்தனை அன்பானவள். அவளுக்காகத் தான் அனைவரும் வந்துள்ளார்கள். இப்படம் 100 நாள் ஓடி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவர் இன்னும் பெரிய வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்.
நடிகை இந்திரஜா சங்கர் பேசியதாவது…
எல்லா பெரியவர்களுக்கும் என் நன்றிகள். ராதிகா மாஸ்டருக்கு என் நன்றிகள். கல்யாணத்திற்குப் பிறகு நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. ராதிகா மாஸ்டரின் முதல் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தன்ஷிகா மேடத்திற்கு நன்றி, என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை சாய் தன்ஷிகா பேசியதாவது…
இந்த மேடை மிக முக்கியமான மேடை. ராதிகா மாஸ்டர் அதற்கு மிக முக்கிய காரணம். எத்தனையோ மேடைகளில் பிரபலங்கள் பேசிவிட்டு உடனே கிளம்புவதைப் பார்த்துள்ளேன், இந்த மேடையில் அனைவரும் மனதார வாழ்த்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராதிகா மாஸ்டரின் மீதான அன்பு தான் காரணம். இந்தப்படம் அவரது ஃபிரண்ட்ஷிப்பிற்காக மட்டுமே செய்த படம். ராதிகா எங்கு பார்த்தாலும் என்னைப்பற்றிப் பேசுவார். ஊக்கம் தந்து கொண்டே இருப்பார். அவர் மனதிற்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். பெண்கள் முன்னேறத் தடையாக இருப்பது ஆண்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்கு என் பயணத்திற்கு ஆண்கள் தான் நிறைய உதவியுள்ளார்கள். என் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் உள்ளார். இனிமே சினிமா வாய்ப்பு வருமா என நினைத்த காலத்தில் வந்த வாய்ப்பு தான் இந்தப்படம். ராதிகா மாஸ்டர் எப்போதும் எனக்கு டார்லிங் தான். அவர் இயக்குநர் ஆவார் என்றே நினைக்கவில்லை. அவர் கதை சொன்ன போதே ரொம்ப பிடித்தது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். தீபக் ஐந்து வருடம் முன் சின்னப்பையானாக இருந்தார் இப்போது என் படத்திற்கே இசையமைக்கிறார். பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றிகள். எல்லோருக்கும் நன்றிகள்.
நாயகன் ருத்விக் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்து நடிகனாக வேண்டும் என்பது தான் ஆசை. தியேட்டருக்கு வரும் மக்கள் 2 மணி நேரம் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் அது தான் சினிமா மேஜிக். கிரியேட்டருக்கான மரியாதை அது தான். ராதிகா மேடம் இது தான் கதை, இது தான் பாத்திரம், நீ தியேட்டர் ஆர்டிஸ்ட் தானே, உனக்கு வருவதைச் செய் என்று ஊக்கம் தந்தார். மைம் கோபி சார், தன்ஷிகா மேடம் நடிப்பைப் பிரமித்துப் பார்த்தேன். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். ராதிகா மேடம் என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார்கள். அவர் தந்த ஊக்கம் தான் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…
ராதிகாவை நான் வாடி போடி என்றுதான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும் அவளும் சினிமாவில் அஸிஸ்டெண்டாக இருந்த காலத்தில் இருந்து தெரியும். நான் படம் செய்ய ஆரம்பித்த போது, அவளைத்தான் முதலில் கூப்பிட்டேன் ஆனால் வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை ஆனால் அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள். அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள், நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள். அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சிக்கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு. நான் சினிமா பற்றி கருத்து சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது வாழ்த்துகள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். சினிமா என்பது என்னைப்பொறுத்தவரை கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் தீபக் பேசியதாவது…
இது எனக்கு முதல் வாய்ப்பு, தயாரிப்பாளர் கோமதி மேடத்திற்கு நன்றி. மிஷ்கின் சார் உங்கள் அறிவுரையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன். தன்ஷிகா மேடத்திற்கு நன்றி. இப்படத்தில் என் உடன் பணிபுரிந்த குழுவினருக்கு நன்றி. இசை சொல்லித் தந்த என் அப்பாவிற்கு நன்றி.
இயக்குநர் ராதிகா பேசியதாவது…
என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின் சாருக்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி. ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார் அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர். படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் செய்வேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment