Sunday, May 5, 2024

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்... பத்திரிகையாளர் சந்திப்பும்...

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்... பத்திரிகையாளர் சந்திப்பும்...

*“குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” ; தெளிவுபடுத்திய அமீர்* 

*“இந்த சூழலில் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான்“ ; உயிர் தமிழுக்கு விழாவில் அமீர் வேதனை*

*“ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி செல்லக்கூடாது என நினைப்பவர் அமீர்” ; இயக்குநர் சரவண சக்தி*

*உயிர் தமிழுக்கு நாயகியுடன் மோதிரம் பந்தயம் கட்டி தோற்ற இமான் அண்ணாச்சி*

*உயிர் தமிழுக்கு பட விழாவில் அமீருக்கு ‘புரட்சி வேந்தன்’ என பட்டம் சூட்டிய கஞ்சா கருப்பு*
*”மதுரையில் பாட்ஷாவாக இருந்தவர் சினிமாவுக்கு வந்தபின் மாணிக்கமாக மாறிவிட்டார்” ; அமீர் குறித்து நெகிழ்ந்த நடிகர் பொன்வண்ணன்* 

*“மீண்டும் ஒரு அமைதிப்படை’ ; உயிர் தமிழுக்கு படம் குறித்து கவிஞர் சிநேகன் பிரமிப்பு*
*”ரஜினிக்கு ஏற்பட்ட மாற்றம் போல அமீருக்கும் நிகழும்” ; உயிர் தமிழுக்கு விழாவில் கரு. பழனியப்பன் உறுதி*

*”அமீரால் தயாரிப்பாளரானவரே உயிர் தமிழுக்கு படத்தை வெளியிட விடாமல் தடுத்தார்” ; இயக்குநர் ஆதம்பாவா* 

*”அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள்” ; உயிர் தமிழுக்கு  விழாவில் இயக்குநர் ஆதம்பாவா வேதனை*
ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. 

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். 
இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது, “அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார். 

நாயகி சாந்தினி ஸ்ரீதரன் பேசும்போது, “இந்த படத்தின் ஹீரோ அமீர், இயக்குனர் ஆதம்பாவா உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருந்தது. ஒரு குடும்பமாகத்தான் இந்த படக்குழுவை நான் உணர்ந்தேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார். 

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை இயக்குனர் ஆதம்பாவா இதில் கொடுத்துள்ளார். படத்தில் அமீருடன் கூடவே வரும் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என இயக்குனர் ஆதம்பாவா கூறினார். ஆனாலும் பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல டேக்குகள் எடுப்பார் என கேள்விபபட்டுள்ளேன். என்னுடன் அவர் சரியாக பழகுவாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை புரட்சித்தலைவர் பற்றிய பாடல் இனி அவருக்கான தேசிய கீதம் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. படம் முடிவதற்குள் கதாநாயகி சாந்தினி தமிழில் நன்றாக பேசிவிட்டால் ஒரு மோதிரம் தருவதாக கூறி இருந்தேன். இப்போது நன்றாக பேசியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பாக்கியை செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார் 

நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது, “அமீர் அண்ணன் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். வாழவந்தான் என எனக்கு ஒரு பட்டம் கொடுத்து நல்லா வாழ்ந்துக்கடா என்று கூறினார். அவருக்கு நான் புரட்சி வேந்தன் என்கிற ஒரு பட்டத்தை இந்த இடத்தில் கொடுக்கிறேன்” என்றார். 

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசும்போது, “அமீர் அண்ணன் எனது மானசீக குருநாதர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு இக்கட்டான பிரச்சனை என்றால் கூட துணையாக வந்து நில்லுங்கள் என அழைக்கும் முதல் நபர் என்றால் அது அமீர் அண்ணன் தான். அப்படி வெளியே தெரியாத பல தருணங்களில் அவரிடம் சென்று நின்று இருக்கிறேன்.. எந்தவித நிபந்தனையும் இன்றி அன்புக்காக மட்டுமே அவரும் வருவார். என்னுடைய பல பட விழாக்களில் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட தனது வேலையை ஒத்தி வைத்து விட்டு தவறாமல் வந்து விடுவார். அதனால் இந்த படத்தின் விழாவிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வரவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் என்னை மறக்காமல் அவரை அழைத்து விட்டார். உடனே வருகிறேன் எனக் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அருகில் என்னை போன்றவர்கள் இருக்க வேண்டியதை ஒரு கடமையாக நினைக்கிறேன். அவருடன் இருந்த சில பேர் அவரை விட்டு இப்போது சென்று விட்டார்கள் என வெளியில் சில பேர் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அவரை விட்டு எங்கேயும் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறோம். 

இந்த படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும்போது அமீர் சாருக்கு இது இரண்டாவது ரவுண்டு ஆரம்பிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து பி அண்ட் சி சென்டர்களுக்கான கதைகள் அமீர் அண்ணனை நோக்கி நிறைய வரும். அதை தவிர்க்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல ஹீரோக்கள் தற்போது பான் இந்தியாவை நோக்கி நகர்ந்து விட்டார்கள். மண் சார்ந்த கதைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அமீர் அண்ணன் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்” என்று பேசினார். 

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “சினிமாவுக்கு வருவதற்கு முன் நல்லவர்களாக இருந்து இங்கே வந்து பாதை மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எல்லாத் தவறுகளையும் பண்ணியவர்தான் அமீர். ஆனால் சினிமா துறைக்குல நுழைந்த போது மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் தனிமனித ஒழுக்கம் கொண்டவராகவும் அப்படியே மாறிவிட்டார். மதுரையில் ஒரு வாழ்க்கை, மதுரைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை என ஒரு பாட்ஷா போல அமீர் எப்போதும் ஒரு நேர்மையுடன் தான் பயணிக்க விரும்பி இருக்கிறார். பணத்திற்காக மற்றும் வேறு எதற்காகவும் அவர் தனது தனிமனித ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால் தான் காலம் இன்று அவருக்கு ஒரு செக் வைக்கும்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் மீது கூறப்படும் எந்த ஒரு தவறுக்கும் அவர் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க மாட்டார். இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் வரும்போது நம்மில் பலர் நிலை குலைந்து போய் விடுவோம். ஆனால் அவர் மிக நிதானமாக தன் மீது உள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு அதை கடந்து சென்ற விதம் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கதையில் எனது கதாபாத்திரமும் இருந்தது. நானும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு என கதை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்தபோது எங்களது கதாபாத்திரங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டன. ஆனால் ஆதம்பாவா ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இந்த படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார். 

கவிஞர் சினேகன் பேசும்போது, “இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது. அமைதிப்படைக்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை. ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார். 

இயக்குநர் ஆதம்பாவா பேசும்போது, “என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்து விட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன். 

அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.

தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.

மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..

கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என என முழுதாக நம்பி அவரை முழுதாக மாற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆதம்பாவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குநராக மாறிவிடுவார்” என்று கூறினார். 

இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது தான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை. 

கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக ஒரு செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா என கரு. பழனியப்பனிடம் கேட்டேன்... அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது என பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது.
 
இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிப்பதா என் நோக்கம் ? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா ? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான  வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன். 

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது. 

சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்கலாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.

எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந் சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்.. இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்.. இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆத்துகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?
 
இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை. ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்ருவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்,

இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார் 

அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமீரிடம், “பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா ? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.. ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ? அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது  கேட்டார்களா ? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள் ? சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா ?” என்றார். 

தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம்பாவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது, “காலில் விழாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? சுயமரியாதை கட்சியாக இருக்கட்டும்.. பகுத்தறிவு பேசுகின்ற கட்சியாக இருக்கட்டும்.. அங்கேயே தலைவர்களின் கால்களில் விழுவதை நீங்கள் எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்.. அந்த நேரத்தில் அந்த காட்சி எடுக்கும் போது அப்படி ஒரு வசனம் மனதில் தோன்றியது. அதை படமாக்கி இருக்கிறோம். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டதாக நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களே பார்த்தால் கூட சிரித்துக் கொண்டே சென்று விடுவார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுப்பவர்கள் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது பேசட்டும்.. அதற்கு நான் அப்போது பதில் சொல்கிறேன்” என்றார்.

Pre-Release Event of Uyir Thamizhukku

Karu Palaniappan Speech

https://www.transfernow.net/dl/20240504UlWPPHvd

Ameer Speech

https://www.transfernow.net/dl/202405042q1qXFkV

Adham Bava Speech

https://www.transfernow.net/dl/20240504tApBQ6Mu

Press Q&A 

https://www.transfernow.net/dl/20240504eVY4ASzM

Full Event Video

https://www.transfernow.net/dl/20240504ic7vojLf

https://www.transfernow.net/dl/202405043Xy1ZPWs

https://www.transfernow.net/dl/20240504qwxw4qKy

https://we.tl/t-RrWwrhtrBR

https://we.tl/t-j3OuoZuLoA

https://we.tl/t-GJekwEx5ig

https://we.tl/t-vXatj2FWpk

https://we.tl/t-U91uegNZ3S

https://we.tl/t-MGBoz0gOaQ

Event Photos : Kindly Download the Link 

https://drive.google.com/drive/folders/1FkHpinC7tED-Z7bmZXthj_9h4I6Czq0q

No comments:

Post a Comment

தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!!

பொங்கல் வாழ்த்துக்களுடன் திரை வெளியீட்டை அறிவித்த “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”  படக்குழு !!  Plan3 Studios சார்பில், ...