ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.
விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நடிகை தீபா பேசியதாவது,
இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக அப்படியே எழுதி எடுத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவை போலவே பழகினார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.
இயக்குநர் கோகுல் பேசியதாவது…,
இயக்குநர் நாகராஜை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியும், பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற மண் சார்ந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் என்பது கிராமத்தில் தோன்றியது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, வெகுளியான மக்களை நாம் அங்குதான் பார்க்க முடியும், இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். படம் நிச்சயமாக வெற்றி பெறும் நன்றி.
இயக்குநர் ராம் சங்கையா பேசியதாவது..,
படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், இந்தப் படத்தின் பெயரைப் பார்த்ததும் இது நம் மக்களின் கதை நம் மண்ணின் கதை என்ற உணர்வு வந்து விட்டது, தமிழ் சினிமாவின் அடையாளத்தை காண்பிப்பது இது போன்ற படங்கள் தான், இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படம் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன். இப்படி ஒரு படத்தை தேர்வு செய்ததற்கு தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.
நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,
இந்த மேடையில் எனக்கு மிகவும் பிடித்த எனக்கு நெருக்கமான இயக்குநர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள அத்தனை நபருடனும் எனக்கு ஒரு நல்ல நட்பு உள்ளது, இவர்கள் எல்லோருமே என்னைப் போல மண்ணை நேசிக்கும் மனிதர்கள், இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள், நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு நீண்ட நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியை ஈட்டுவார், இது போன்ற படங்களை மேலும் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.
ஒளிப்பதிவாளர் சீனிவாசன் பேசியதாவது..,
இயக்குநர் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பை அவர்தான் கொடுத்தார். தயாரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார், படப்பிடிப்பின் அனைத்து சூழலிலும் எங்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தார். படத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா பேசியதாவது…,
இதுதான் எனக்கு முதல் மேடை, கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்த படம் அனைவரையும் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது,
தமிழ் சினிமாவில் இது போன்ற சினிமா மிக மிக அவசியம். இது போன்ற படங்களை பார்ப்பது அரிதாகி விட்டது. இப்போது வரும் படங்கள் அதிகமாக உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அனைத்தும் வியாபாரம் ஆகி விட்டது, இந்தச் சூழலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். பெரிய படங்கள் தான் மக்களுக்கு பிடிக்கும் என்பது இல்லை, அதை பல முறை மக்கள் பொய்யாக்கி விட்டனர். மக்கள் நல்ல படத்திற்கு கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள். மக்களுக்கு தேவையான படம் இது, மக்களும் இதை புரிந்து கொண்டு, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இதன் வெற்றி விழாவில் சந்திப்போம் நன்றி.
நடிகர் ரவி மரியா பேசியதாவது,
இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், பல இயக்குநர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளோம். குடும்பத்துடன் பார்க்கும் படங்களின் வரிசையில் இந்தப் படம் முதலில் இருக்கும். பல குடும்பங்களை இந்தப் படம் இணைக்க போகிறது என்பது உறுதி. இந்தப் படம் இயக்குநரின் ஒரு 25 வருட போராட்டம், பல வலிகளை சுமந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். கண்டிப்பாக அவரது உழைப்பு வீண் போகாது. இந்தப் படம் மக்கள் மனதைக் கண்டிப்பாக கவரும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் நாகராஜ் பேசியதாவது…,
எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்கள் மத்தியில் எங்களது படைப்பை அறிமுகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோவம், வாழ்க்கை, வாழ்வியல், இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் என் நண்பர்கள் தான் என்னை நகர்த்தி சென்றனர். அவர்களில் சிலர் இங்கு வந்துள்ளனர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி அவருடன் பணி புரிந்தது ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்தப் படத்தை நான் எழுதி முடித்ததும், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தி அய்யா தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதே போல அனைத்தும் அமைந்தது விட்டது. இந்தச் சூழலில் நான் மாரிமுத்து சாரை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment