*புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக்கப்பட்ட 'ராஜா கிளி' ரிலீஸ்*
'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீன், முபாஸிர், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் ஒரு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மழை நாட்களில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே போராடும் சூழ்நிலையில் 'ராஜா கிளி' படத்தை டிசம்பர் 13-ல் வெளியிடுவது சரியாக இருக்காது எனக் கருதிய படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதன் ரிலீஸ் தேதியை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளார்.
'ராஜா கிளி' இன்றைய காலத்திற்கு ஏற்ற 'ரத்தக்கண்ணீர்' போன்ற ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் இந்த படத்தை தங்கள் பிரச்சனைகளை மறந்து திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*A.ஜான் PRO*
No comments:
Post a Comment