இந்தியாவில் பண்பாட்டு தளத்திலும், சபை நாகரிகத்திலும் முன்னோடி முதன்மை மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு.
திரைப்பட துறையில் தென்னிந்திய சினிமாவிற்கு தலைமையகமாகவும், சினிமா வளர்ச்சிக்கு பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் வழிகாட்டுகிறது தமிழ் சினிமா.
கடல் கடந்த நாடுகளில் இந்திய சினிமாவின் முகங்களாக, அடையாளங்களாக இன்றைக்கு இருக்கும் பல்வேறு சாதனையாளர்கள் உருவானது தமிழ் சினிமாவில் தான்.
அப்படிப்பட்ட பெருமைமிகு தமிழ் சினிமாவிற்கு, பாட்டல் ராதா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின், வழக்கம் போல தனது நாலாந்தரமான மேடைப் பேச்சின் மூலம் சிறுமை சேர்த்திருகிறார். அந்த மேடையில் இருந்த தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குநர்கள் பலரும் அதனை கண்டிக்காமல் கடந்து சென்றதுடன், இன்றுவரை கள்ள மௌனம் காத்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப்.
பெண் செய்தியாளர்கள், பெண் பார்வையாளர்கள் நிறைந்த அந்த நிகழ்வில் வாயால் பேச கூச்சப்படும் நாலாந்தரமான வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தி பேசி பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் சோகங்களை மறக்கவும், மகிழ்ச்சியை மேலும் மகிழ்வுடன் கொண்டாடவும் இசை மருத்துவராக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. அவரது இசை தன்னை குடிக்கவும், மதுவுக்கு அடிமையாக்கவும் காரணமாக உள்ளது என பேசி இளையராஜாவின் இசையை சிறுமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
ஒருவரை அன்பின் மிகுதியால் ஒருமையில் பேசுவதற்கும், அதுவும் பொது மேடையில் பேசுவதற்கு வயதும், தகுதியும் வேண்டும். ஹாலிவுட் படங்களை காப்பியடித்து படம் இயக்கும் மிஷ்கின் அவர்களுக்கு அந்த தகுதி உண்டா என்று சமூகவலை தளங்களில் கேள்வி எழுப்பபட்டு வருகின்றன.
சமூகம், அரசியல் என்று பல்வேறு விஷயங்களில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் அறிக்கைகளாக கடந்த காலங்களில் வெளியிட்ட மேற்கண்ட இயக்குநர்கள் மெளனம் காத்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப்.
எனவே பொது மேடையில் பொறுப்பற்ற முறையில் அநாகரிகமாகவும், "நா" கூசும் வகையில் பேசிய இயக்குநர் மிஷ்கின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவ்வாறு மிஷ்கின் மன்னிப்பு கேட்காத வரையில் தென்னிந்திய மொழிகளில் சினிமா பத்திரிகையாளர்களாக பணியாற்றுவோர் ஒருங்கிணைந்து இருக்கும் தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் உறுப்பினர்கள், இயக்குநர் மிஷ்கின் பங்கேற்கும் சினிமா விழாக்களில் பங்கேற்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக அனைத்து சினிமா பத்திரிகையாளர்களும் ஆதரவு வழங்கிட வேண்டுகிறோம்.
சினிமா தவிர்த்து, வேறு எந்த வகையான பொது நிகழ்வுகளில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு கடிதம் எழுதுவது என தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் முடிவெடுத்திருக்கிறது.
சினிமா, மற்றும் பொது மேடைகளில் அநாகரிகமாகவும், கண்ணிய குறைவாகவும் பேசி வரும் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மீது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் கடிதம் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment