*‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*


*‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*




வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,”

மேலும், “இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”

“இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது,” இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.



தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள், ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இந்தப் படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார். தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. முன்பெல்லாம் 100 நாள், 175 நாள், 200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள். தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த 50வது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்; அதேபோல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்; அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதிய படங்களும் வெளியாக உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர், இந்த 50வது நாள் விழாவிலும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.


விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50வது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன்  நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி,”.

“செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களை தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி,” என்றார்.



தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் எங்களது சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார். ஒரு படம் வெளியாகி முதல் வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விஷயம். ஆனால், அந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விஷயம். திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒரு வெற்றிப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப் பரிசு மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும். வெற்றி விழா நடைபெற்ற நாளிலேயே, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார். அந்த எண்ணம் இன்று இந்த விழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

“‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறது. இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம். இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமைய வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.


நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றி விழாவில் கலந்து கொள்கிறேன். விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, அதை விட சிறப்பாக இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது. இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விஷயம்,” என்றார்.

“ஐசரி கணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது; அவர் தொடும் விஷயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன. அந்த அதிர்ஷ்டம் இந்தப் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படக்குழுவின் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் ரசித்தேன். செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம்,” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், “அனைவருக்கும் எனது வணக்கம். அமைச்சர் அவர்களுக்கும், என் அண்ணன் போன்ற ஐசரி கணேஷ் சாருக்கும், விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு, குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். எந்த நேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை,” என்றார்.

“இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி, அதையும் வெற்றிப் படமாக மாற்றுவது மிகவும் கடினமான விஷயம். அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும்,”.

“குஷ்மிதாவை சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும், கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு. என்னை அழைத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.


Comments