பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!
பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!
T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ்
சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்
D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன்
கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம்,
மணல்
கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும்
அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள
நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில்
திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து
கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு
வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், “லெனின் பாண்டியன்”
படத்தின் கதைக்களம், உருவாக்கம், நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட
பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
விநியோகஸ்தர் சங்கம் சார்பில் அருள்பதி பேசியதாவது:
“சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். அவருக்கு இந்தப் படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன்.
இன்று மேடையில் பேசிய விநியோகஸ்தர் சதீஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
‘லெனின் பாண்டியன்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.”
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:
“‘லெனின் பாண்டியன்’ படத்தை கடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சத்யஜோதி பிலிம்ஸ் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் தியாகராஜன் சாருக்கு
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது
பெறவிருக்கும் அவருக்கு வாழ்த்துகள். தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது பெறுவது
சாதாரண விஷயம் கிடையாது. சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக மதிப்புகளைப் பேசும் அந்த நிறுவனத்தின்
அடுத்த படமாக ‘லெனின் பாண்டியன்’ வருவது மகிழ்ச்சி. சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து
விக்ரம் பிரபு ‘சிறை’ படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றது
போல, தர்ஷனும் இந்தப் படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தர்ஷனுக்கு
மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய நல்ல ஹீரோக்கள்
தேவை; முக்கியமான ஹீரோவாக தர்ஷன் கணேசன் வர வேண்டும்.
இளையராஜா சாரின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பாலச்சந்திரனின்
இயக்கமும், டிரெய்லரும் சிறப்பாக இருக்கின்றன. கங்கை அமரன் சார் இந்த வயதிலும் இவ்வளவு
எனர்ஜியுடன் நடிப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு வயதே இல்லை என்று சொல்ல வேண்டும்;
இன்னும்
நிறைய படங்களில் நடிக்க வேண்டும். ரோஜா மேம் மீண்டும் திரையில் வருவது மகிழ்ச்சியாக
இருக்கிறது. இந்த அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய
வெற்றிப் படமாகவும், சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு பிளாக்பஸ்டராகவும் அமைய
என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது:
“தமிழ் சினிமாவில் மிகத் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி
பிலிம்ஸ் இருக்கிறது. தியாகு சாரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும்
இதற்கு முக்கியக் காரணம். ‘லெனின் பாண்டியன்’ படத்தில் கங்கை அமரன் சாரின் நடிப்பு
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு முன்பு இருந்தவரை விட,
படப்பிடிப்பு
தொடங்கிய பிறகு அவரது தோற்றமும் வாழ்க்கை முறையும் மாறி, அந்தக் கதாபாத்திரமாகவே
வாழ்ந்திருக்கிறார். படம் முடிந்த பிறகும் அந்தக் கதாபாத்திரம் நம்முடன் பயணித்தது
போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய
தனிப்பட்ட ஆசை.
ரோஜா எனது குடும்ப நண்பர். தன்னுடைய மிகப்பெரிய இமேஜைத் தாண்டி, இப்படிப்பட்ட
ஒரு கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் பாலச்சந்திரன் சிறந்த
எழுத்தாளராகத் தெரிகிறார்; படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்ட வைக்கும் வசனங்கள்
இருக்கின்றன. சமூகத்துக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும்
சொல்லியிருக்கிறார். சிவாஜி குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும்
ஒரு பொக்கிஷம் தர்ஷன் கணேசன். அவரது நடிப்பு மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது;
சிவாஜி
சாரின் ஆரம்பகால நடிப்பை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய
எதிர்காலம் இருக்கிறது. அதேபோல், அவரை சிறந்த முறையில் வழிநடத்தும் ராம்குமார் சார்
போன்ற தயாரிப்பாளர் நட்பான மனிதர் இருப்பதால், தர்ஷனின் பயணம் இன்னும் சிறப்பாக
அமையும். ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று அனைவரின் சார்பிலும்
வாழ்த்துகிறேன்.”
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசியதாவது:
“தியாகு சாருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகி வருகிறேன். அவர் ஒரு படத்தைத்
தேர்வு செய்திருக்கிறார் என்றால், அது நிச்சயம் நல்ல படமாகவும் வெற்றிப் படமாகவும் இருக்கும்
என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ‘லெனின் பாண்டியன்’ படத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
தேசிய விருது பெற்றிருக்கும் தியாகு சாருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
சார்பிலும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்வி மேமும்
எனக்கு மிகவும் நெருக்கமானவர். தியாகு சாரின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய பங்களிப்பும்
முக்கியமானது. செல்வி மேம், அர்ஜுன், செந்தில் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினருக்கும்,
இந்தப்
படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
ஜோதிடர் செல்லி பேசியதாவது:
“ஜோதிடருக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் என்னைப்
பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக எப்போதும் அண்ணனாக இருக்கும் தியாகராஜன்
சார்தான் எனக்கு எல்லாம். அவர் கொடுத்த வாய்ப்புதான் இந்தப் படம். அண்ணன் சொல்லிவிட்டால்
அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. பாலா சார் என்ன சொன்னாரோ அதைச் செய்து,
அவர்
நிறைய திட்டியதன் மூலமாகத்தான் இன்று நடிகனாக நிற்கிறேன். அதற்காக பாலா சாருக்கு என்னுடைய
நன்றி.”
நடிகை அர்ச்சனா பேசியதாவது:
“என் பணிகளில் நான் தொடர்ந்து என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து வருகிறேன்.
அதற்கேற்ற வாய்ப்புகளும் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ்
போன்ற ஒரு பழமையான, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இயக்குநர் பாலா சாருக்கு என்னுடைய மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று
நம்புகிறேன். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக
நடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். படத்தை முழுமையாகப் பார்க்க நாங்களும் மிகவும் ஆவலுடன்
காத்திருக்கிறோம். நன்றி.”
இயக்குநர் பி. வாசு பேசியதாவது:
“கங்கை அமரன் எப்போதும் ஜாலியாக இருப்பவர். ஆனால் இந்தப் படத்தின் டிரெய்லரில்
அவரை மிகவும் கோபமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு மிகப்பெரிய
ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்த தியாகராஜன்
சார் மற்றும் இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள். அமரன் எங்களை காரில் அழைத்துச்
சென்று, ‘இவர்கள் இருவரும் நன்றாக ஓடுவார்கள்; இவர்களை வைத்து படம் எடுங்கள்,
இயக்குநர்களாக
அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொல்லி எங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிய மிகச்சிறந்த
மனிதர். இளையராஜா சாருடன் அமர்ந்து இசையமைப்பின் போது அவர் சொன்ன மெட்டுக்கு உடனடியாக
வரிகள் எழுதுவது, ‘ஆனந்த ராகம்’, ‘கோடை காலக் காற்றே’ போன்ற அற்புதமான
பாடல்களை உருவாக்கியது என இன்றும் மறக்க முடியாது.
நானும் அமரனும், தியாகராஜன் சாரும் பல ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாகப்
பழகி வருகிறோம். இத்தனை ஆண்டுகள் நட்பு தொடர்ந்ததற்குக் காரணம் உண்மை மட்டும்தான்.
ஒருவர் உண்மையாக இருந்தால் வேறு எதுவுமே தேவையில்லை; நட்பு தொடர்ந்து
கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் சினிமாவே ஒரு குடும்பம் போல இருந்தது. இன்றும்
ஒருவருடைய வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகுகிறோம். அப்படிப்பட்ட
அற்புதமான நட்பிலிருந்து இன்று அமரன் நடிகராக அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. இந்தப்
படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நடிகர் இளவரசு பேசியதாவது:
“லெனின் பாண்டியன்” என்ற தலைப்பைக் கேட்டவுடன், 1990-க்கு முன்பு
மதுரையில் பிறந்தவர்களுக்கு ஒரு சைக்கிள், சிவப்புக் கொடி, தீக்கதிர் பத்திரிகை ஆகியவைதான்
நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு
சென்றவர்களில் இளையராஜா சார், கங்கை அமரன் அண்ணா, பாஸ்கர் சார்
உள்ளிட்டோருக்கும் இந்தப் படத்தின் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் மதுரையில்
பிறந்து சினிமாவுக்கு வருவதற்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தவர்களுக்கும் இந்த நேரத்தில்
நன்றி சொல்ல வேண்டும்.
கங்கை அமரன் அண்ணாவின் பாடல்களும், இளையராஜா சாரின் இசையும் எங்களுடைய தலைமுறைக்கு மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியவை. நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில்
அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. ஒருகட்டத்தில் கங்கை அமரன் ஹீரோவாகவும்,
அவரது
மகன் இயக்குநராகவும் இருக்கும் படத்தில் நான் நடித்திருக்கிறேன். இளையராஜா சார் இசையமைத்த
படங்களில் கேமராமேனாகவும், நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். பாரதிராஜா,
இளையராஜா,
கங்கை
அமரன், பாஸ்கர் போன்றவர்கள் எங்களுக்காக உருவாக்கிய அந்தப் பாதைதான் மதுரையில் இருந்து
பலரும் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் பற்றியும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். கார்கில்
போர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன்.
ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை எவ்வித ஈகோவும் இல்லாமல், ஒவ்வொருவரையும்
அணுகி ஒருங்கிணைத்து நடத்துவது எப்படி என்பதை அவரிடம் அப்போது கற்றுக்கொண்டேன். தயாரிப்பிலும்
அவர் காட்டும் நேர்த்தி குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துக்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டு
பட்ஜெட் போட்டு செயல்படுவது சத்யஜோதி நிறுவனத்தின் சிறப்பு.
“லெனின் பாண்டியன்” படத்தின் இயக்குநர் பாலச்சந்திரனுக்கும், ஒளிப்பதிவாளர்
மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மரியாதையும் வாழ்த்துகளும். தர்ஷன்
கணேசன், சிவாஜி சார் குடும்பத்திலிருந்து அறிமுகமாகியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.
அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இளையராஜா சாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்
என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற
வேண்டும். இப்படத்தின் வெற்றியில் நாமும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இயக்குநர் கண்ணன் பேசியதாவது:
நான் கோ-டைரக்டராக பணியாற்றிய காலத்திலிருந்தே தியாகு சாருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் சீரியலிலும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் சீரியல், சினிமா என்று
பிரித்துப் பார்க்காமல், நல்ல கதை, தரமான மேக்கிங், டிஸிப்ளின் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்
கொடுப்பவர். சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டாலே அதில் பாதி வெற்றி
உறுதி. கதை அவரை முழுமையாக ஈர்க்க வேண்டும்; அதேபோல் படப்பிடிப்பிலும் நேர்த்தியும்
ஒழுங்கும் இருக்க வேண்டும். காலை 7 மணிக்கே முதல் ஷாட் தொடங்க வேண்டும் என்ற அளவுக்கு
நேரத்தை அவர் கடைப்பிடிப்பார்.
எனக்கு “ஜெயம் கொண்டான்” படத்தை இயக்கும் வாய்ப்பை தியாகு சார் வழங்கினார்.
அந்தப் படமும் இன்றளவும் ஒரு தரமான படமாக இருப்பதற்கு அவருடைய பங்களிப்பு முக்கிய காரணம்.
அதேபோல், “லெனின் பாண்டியன்” படத்தின் மூலம் பாலச்சந்திரனை அறிமுகப்படுத்தியிருப்பதும்
அவருடைய மிகப்பெரிய முயற்சி. இப்படிப்பட்ட தயாரிப்பாளரின் நிறுவனத்தில் அறிமுகமாவது
இயக்குநருக்கே ஒரு வெற்றிதான்.
தர்ஷனை இந்தப் படத்தில் பார்த்தபோது, பழைய காலத்து நடிகர்களை நினைவுபடுத்தும்
அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் இருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான
கதாபாத்திரம் கிடைத்திருப்பது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
கங்கை அமரன் சாரின் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே வியந்தேன். ஒவ்வொரு ஃப்ரேமிலும்
அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவரை நடிகராக பயன்படுத்தாதது குறித்து
நமக்கே ஒரு குறை ஏற்படும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.
ரோஜா ஒரு தரமான நடிகை. இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இளையராஜா சாரின் இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான பலமாக இருக்கும். இயக்குநர்,
நடிகர்கள்,
தொழில்நுட்பக்
குழுவினர் என அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ள இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்
என்று வாழ்த்துகிறேன்.
இயக்குநர் D.D. பாலச்சந்திரன் பேசியதாவது:
இது என்னுடைய முதல் மேடை. இந்த மேடையில் ஏறுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ,
அவர்களுக்கு
நன்றி தெரிவிக்கும் மேடையாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். முதல் நன்றி தியாகராஜன்
சாருக்குத்தான். அனைவருக்கும் T.நகர் என்றால் தியாகராய நகர்; எனக்கு என்றென்றைக்கும்
அது தியாகராஜன் நகர்தான். சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் தான், “இந்தப் படத்தை
நாம் பண்ணலாம்” என்று தியாகராஜன் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பினால்தான்
இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.
என்னைப் போன்ற ஒரு புதுமுக இயக்குநரை நம்பி இந்தப் படத்தை வழங்கிய தியாகராஜன்
சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்தப் படத்திற்காக நான் எவ்வளவு தயாராக
இருந்தேன் என்பதும், படத்தை எந்த அளவுக்கு உருவாக்க வேண்டும் என்ற தெளிவும்
அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்தப் படத்தை
உருவாக்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும்,
தியாகராஜன்
சாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பத்ரி பேசியதாவது:
இயக்குநர் பாலச்சந்திரன் எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத்
தெரியும். நான் திரைப்பட பள்ளியில் படித்திருந்தாலும், தியாகு சாரின்
பள்ளி என்பது ஒரு ‘பிராக்டிக்கல் ஸ்கூல்’. அந்தப் பயிற்சியின் மூலம் எந்தத் துறைக்குச்
சென்றாலும் நேரடியாகப் படம் தொடங்கும் அளவுக்கும், எந்த ஹீரோவையும் கையாளும் அளவுக்கும்
அவர் தயாராக்கி விடுவார். அதே போல பாலச்சந்திரனை தியாகு சார் அந்த அளவுக்கு தயார் செய்து
வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை தியாகு சார் ஓகே செய்திருக்கிறார் என்பதே பெரிய
விஷயம். அவர் சாதாரணமாக எந்தக் கதையையும் உடனடியாக ஓகே செய்ய மாட்டார். நானும் அந்தக்
குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் ஸ்கிரிப்ட்டைத் தெரிந்து வைத்திருக்கிறேன்;
சில காட்சிகளையும்
பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே இது ஒரு ‘அவுட் ஆஃப் தி வேர்ல்ட்’ படமாகவும்,
சமூகத்துக்குத்
தேவையான வலிமையான படமாகவும் உருவாகியிருக்கிறது.
பாலச்சந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகள். “லெனின் பாண்டியன்” மூலம் நாம் பல
அற்புதங்களைச் செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை இவ்வளவு பேர்
முன்னிலையில் நிற்க வைத்து பேசுவதற்கும் இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும்
என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணா எப்போதும் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர்.
நான் தினமும் சரியாக 7 மணிக்கு எனது ஸ்டூடியோவிற்கு செல்வேன். ஒருநாள் ஐந்து
நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக
நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விட சீக்கிரம் வந்து என்னிடமே இப்படிக் கேட்கிறாரே
என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
சிவாஜி அண்ணா நடிப்பைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர்
புதிதாக அறிமுகமாகும்போது, “யாருப்பா இது?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு
இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, “யாரு இந்த ஆள்?”
என்று
வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கலைஞர்
சிவாஜி கணேசன்.
அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில்
பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில்
தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
என்னுடைய அன்புத் தம்பி தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு
என்னுடைய வாழ்த்துகள். என் தம்பியை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவரும் நன்றாக நடித்துள்ளார்.
“லெனின் பாண்டியன்” போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படத்தை உருவாக்கிய சத்யஜோதி
பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் D.D. பாலச்சந்திரனுக்கும், படக்குழுவினர்
அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
நடிகர் தர்ஷன் கணேசன் பேசியதாவது:
செப்டம்பர் 12, 2026 என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். “லெனின்
பாண்டியன்” படத்தின் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயது முதலே சிவாஜி சார் படங்களைப் பார்த்தும்,
அவரது
வசனங்களைப் பேசியும், பாடல்களைக் கேட்டும் வளர்ந்தவன் நான். நடிப்பை சீரியஸாக
எடுத்துக்கொள்ளும்போது, நம்மால் நன்றாக செய்ய முடியுமா என்ற ஒரு சுய சந்தேகம்
இருந்தது. அதிலிருந்து வெளியே வர கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு
மிகப்பெரிய ஆதரவாக இருந்த என் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி உள்ளிட்ட என் குடும்பத்தினருக்கு முதல் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
என் நண்பர்கள், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்
அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல நண்பர் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக
இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்திருக்கிறார். சத்யஜோதி
பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார்
ஆகியோர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிகுந்த நன்றி. சத்யஜோதி குடும்பத்திற்கும்
உங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
இது எனக்கு அறிமுக விழா மட்டுமல்ல, இயக்குநர் பாலச்சந்திரன் சாருக்கும் அறிமுக விழா. இந்தக்
கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி.
கங்கை அமரன் அங்கிள், உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ரோஜா மேம் உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்,
எடிட்டர்
நாகூரான் சார் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகப் பயணித்து வரும்
அனைவரும் இன்று இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாஜி என்ற பெயரைச்
சொன்னாலே நீங்கள் காட்டும் அன்பு எனக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்
மிக்க நன்றி.
தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் பேசியதாவது:
நான் திரையுலகில் இசையை நேசிக்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் ராஜா சார்.
அவர் ரீரெக்கார்டிங் மற்றும் பாடல் பதிவு செய்யும்போது அருகில் இருந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
ஒரு காட்சிக்கு அவர் இசையமைக்கும் விதமும், இசையை உருவாக்கும் விதமும் எப்போதும் என்னை வியக்க
வைக்கும். அதேபோல், நேரம் தவறாமல் இருப்பதை ராஜா சார் மற்றும் சிவாஜி சார்
ஆகிய இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். அவர்களின் நேர்த்தியும், பணியின் மீதான
அர்ப்பணிப்பும் ஒரு தனி பள்ளி. “அது வேற ஒரு ஸ்கூல்; நான் அந்த ஸ்கூலில்
இருந்து வந்தவன்” என்று இன்றைய தலைமுறையினரிடம் எப்போதும் சொல்வேன். அவர்களிடமிருந்து
கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்கள்.
சத்யஜோதி பிலிம்ஸ் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, அவற்றை வணிகரீதியாகவும்
வெற்றி பெறச் செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம். “லெனின் பாண்டியன்” வழக்கமான கதையாக
இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இப்படத்தைத் தயாரிக்க முடிவு
செய்தோம். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ள சத்யஜோதி நிறுவனத்தின் வரிசையில்
பாலச்சந்திரனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறோம்.
தர்ஷனை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி சாரின் முகத்தோற்றமும், உடல்மொழியும்
அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என்று
முடிவு செய்தோம். கங்கை அமரன் சாரிடம் இதுவரை பார்க்காத ஒரு நடிப்புத் திறமை இருப்பதை
இந்தப் படத்தில் கண்டோம். ரோஜா மேடமும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார்.
தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
வித்தியாசமான அணுகுமுறையில் உருவாகியுள்ள “லெனின் பாண்டியன்” ரசிகர்களுக்கு
புதிய அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜா சாருக்கும், படக்குழுவினர்
அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
கங்கை அமரன் பேசியதாவது:
என் அண்ணனின் ஆசிர்வாதத்தில் “கோழி கூவுது ” என்ற படத்தை இயக்கி இயக்குநர் ஆனேன்.
அதன்பிறகு சுமார் 18 படங்களை இயக்கியுள்ளேன். சினிமாவில் இசையமைப்பாளராகவும்
பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இப்படி சினிமாவில் பல்வேறு பணிகளைச் செய்திருந்தாலும்,
இப்போது
நடிகராக மீண்டும் சத்யஜோதி தியாகரி வாய்ப்பு
தந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை வழங்கிய தியாகு சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, நடிகராக இன்று அவருக்கு அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்க்கையில் இதுபோன்ற புதிய அனுபவங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக
இருக்கிறது. இந்தப் படக்குழுவினருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். இயக்குநர் பாலச்சந்திரனுக்கு
வாழ்த்துகள்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது:
இந்தப் படத்தில் என் அப்பாவை பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக
அவர் சற்று ஓவராக நடிப்பார். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும்
நடித்திருக்கிறார். அதற்கான முழு கிரெடிட்டும் இயக்குநர் பாலச்சந்திரனுக்குத்தான்.
அப்பாவிடமிருந்து அவர் விரும்பிய நடிப்பை மிக அழகாகப் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில்
என் அப்பா தெரியாமல், அந்தக் கதாபாத்திரம்
மட்டுமே நம் கண்முன் தெரியும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அந்தச் சம்பவத்தை எந்த
வகையிலும் கமர்ஷியலாக்காமல், உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான்
இயக்குநரின் விருப்பமாக இருந்திருக்கிறது. நானும் சில இடங்களில் சினிமாவுக்காக மாற்றம்
செய்யலாம் என்று கூறினேன். ஆனால் அவர் தனது பார்வையில் மிகவும் தெளிவாக இருந்தார்.
அவர் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதனால் இது மிகவும் அழுத்தமான,
மனதைப்
பாதிக்கும் படமாக வந்திருக்கிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என
ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தர்ஷனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நடிப்பு அவரது ரத்தத்திலேயே இருக்கிறது.
இந்தப் படத்தில் அவர் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசாக அறிமுகமாகிறார் என்ற எண்ணம்
நமக்கு வருவதில்லை. ஒரு நடிகராக மட்டுமே அவரைப் பார்க்கிறோம். அவரது சிறிய சிறிய ரியாக்ஷன்கள்
முதல் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு வரை மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும்
இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பது
மிகவும் பாராட்டுக்குரியது. அவருக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
ரோஜா மேம் இந்தப் படத்தில் முற்றிலும்
வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் இருக்கிறார். அவருடைய நடிப்புத்
திறனை வெளிப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட கதாபாத்திரம் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. இயக்குநரின் பார்வைதான் ஒரு நடிகரை எப்படி திரையில் காட்ட வேண்டும் என்பதைத்
தீர்மானிக்கிறது. அந்த வகையில் பாலச்சந்திரன் ரோஜா மேடமை இந்தப் படத்தில் வித்தியாசமாகக்
காட்டியிருக்கிறார்.
மேலும், ராஜா சாரின் இசை மீண்டும் தொடர்ந்து ஒலிக்கும் காலகட்டம் உருவாகியிருப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் வாரா வாரம் இளையராஜா சாரின் இசையுடன்
படங்கள் வெளியாகும். அந்த பொற்காலம் மீண்டும் தொடங்கியிருப்பது போலத் தோன்றுகிறது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்; அதுபோல மீண்டும் அந்த இசைக் காலம் திரும்பி வந்திருப்பது
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்
நாயகி ஸ்ரித்தா ராவ் பேசியதாவது:
“லெனின் பாண்டியன்” படத்தின் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் தியாகராஜன் சார்,
செந்தில்
சார், அர்ஜுன் சார், செல்வி மேம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தியாகராஜன் சார் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க
மாட்டேன். மதுரையில் படப்பிடிப்பின்போது எருதுகளின் மணி சத்தத்தைக் கேட்டு பயந்தபோது,
என்னை
அழைத்துக்கொண்டு சுப்பு சார் ஓடிய வேகத்தைப் பார்த்து அவரை ‘உசைன் போல்ட்’ என்று அழைத்தேன்.
அன்று தொடங்கிய அவருடைய ஓட்டம் இன்றுவரை தொடர்கிறது.
இயக்குநர் பாலச்சந்திரன் சார் கொடுத்த வசனங்கள் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
அவருடைய எழுத்து என்னுடைய ஞாபகத்திறமையை மீண்டும் கொண்டு வந்தது. ரோஜா மேமுடன் பணியாற்றியது
மிகப்பெரிய அனுபவம். அவரை நான் நீண்ட காலமாக ரசித்து வந்திருக்கிறேன். அவருக்கு முன்பாக
நின்று வசனம் பேசியபோது நிறைய கற்றுக்கொண்டேன். தர்ஷனும் மிகவும் ஆதரவாக இருந்தார்.
அவரை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி கணேசன் சாரைப் போலவே இருப்பதாக அவரிடம் கூறினேன்.
கங்கை அமரன் சாரை முதலில் படத்தின் கதாபாத்திர தோற்றத்தில்தான் பார்த்தேன்.
பின்னர் மதுரையில் அவரை மிகவும் இளமையான தோற்றத்தில் பார்த்தபோது ‘நீங்கள் ரொம்ப Gen-Z-ஆ இருக்கிறீர்களே’
என்று சொன்னேன். இந்தப் படத்தில் தனக்கு டூயட் இல்லை என்றும், அடுத்த படத்தில்
கண்டிப்பாக டூயட் கேட்பேன் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். அவருக்கு அந்த ஆசை
நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சார், எடிட்டர் நாகூரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர்
அனைவருக்கும் நன்றி. “லெனின் பாண்டியன்” செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
அனைவரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றி.
நடிகை ரோஜா பேசியதாவது:
என்னுடைய முதல் படம் ‘செம்பருத்தி’. இப்போது “லெனின் பாண்டியன்” மூலம் ரீ-என்ட்ரி
கொடுத்திருக்கிறேன். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று நீங்கள் சொல்லும்போதுதான்,
இவ்வளவு
நீண்ட பயணத்தை நான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது. எந்த
ஒரு காட்ஃபாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும்
பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா
சாரே, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான
விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.
இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சுப்பு. நாங்கள் நீண்ட கால
நண்பர்கள். நான் அரசியலுக்குச் சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.
அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். அப்போது சுப்பு இந்தப் படத்தின்
கதையைப் பற்றி கூறினார். இயக்குநர் பாலச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னபோது,
அவர்
கதை சொன்ன விதத்திலேயே நான் முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம்
எப்படி நடிக்க வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும், உடல்மொழி எப்படி
இருக்க வேண்டும் என்பது வரை அவர் விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின்
மீதான அவருடைய ஆர்வமும், பார்வையும் என்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை
ஏற்படுத்தியது.
சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்திருக்கிறது. சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள நான், இப்போது தர்ஷனுடனும்
நடித்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் என்னை ஒரு குடும்பத்தில் ஒருவரைப்
போல அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துவார்கள். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது;
படப்பிடிப்பு
தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். கங்கை அமரன் சாருடன்
இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்தும்,
இயக்கியும்
இருக்கும் அவர், இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள்
மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் படத்தில்
நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். தியாகராஜன் சார், செல்வி மேம்,
செந்தில்
சார், அர்ஜுன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“லெனின் பாண்டியன்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பாரதிராஜா சார் படங்களைப்
பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல, இந்தப் படத்தைப் பார்த்து வெளியே
வரும்போதும் ரசிகர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்.
தர்ஷன் கணேசன் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து
வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல், முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல
மிகவும் எளிமையாகப் பழகினார். சக நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து அதற்கேற்றபடி ரியாக்ட்
செய்வது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெயிலில் படக்குழுவினருடன் இருப்பது
என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம்
போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில், “லெனின் பாண்டியன்”
படப்பிடிப்பில் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன். அதனால் இந்தப் படம் வெற்றி
பெற வேண்டும் என்பதோடு, தர்ஷன் கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும்
நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நடிகர் ராம்குமார் பேசியதாவது:
சத்யஜோதி பிலிம்ஸ், தியாகு சார், செந்தில் சார், அர்ஜுன் சார்
ஆகியோருக்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு மிகவும் முக்கியம்.
தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா
வாழும். அதேபோல் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து
ஆதரவளிக்க வேண்டும். இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர், தான் வாங்கிய
தொகையைவிட 20 சதவீதம் அதிகமாகத் தயாரிப்பாளருக்கு வழங்கப் போவதாக மனதாரக் கூறியது மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் படத்தின்
ரஷ் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். கங்கை அமரன் சார், தர்ஷன் கணேசன்,
ஸ்ரித்தா
ராவ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக தர்ஷன் கணேசன்,
ஸ்ரித்தா
ராவ் ஆகிய இருவரும் புதுமுகங்களாக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அவர்களிடம் தொடர்ந்து இதேபோல் நடிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி நல்ல
நடிகர்களாகத் தொடர்ந்து நடித்தால், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும். படத்தில் அனைவருமே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப் இயக்குநர் பாலச்சந்திரன் சார். அவருடைய
இயக்கம் சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய
வாழ்த்துகள். அனைவரும் வாழ்க, வளமுடன்.
75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியை
எழுப்பும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது. டிரெய்லர் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள இப்படம், திரையரங்கில் புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி
பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இப்படம் வரும் செப்டம்பர்
25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

.jpeg)
Comments
Post a Comment